ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஜனக்புரி விபத்து ஜல் போர்டு ச-ப் - கான்ட்ராக்டர் கைது; அதிகாரிகள் சஸ்பெண்ட்
ADDED : பிப் 08, 2026 12:41 AM

புதுடில்லி: ஜனக்புரியில் ஜல் போர்டு தோண்டிய, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், சப்-கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டில்லி கைலாஷ்புரியை சேர்ந்தவர் கமல் பயானி, 25. ரோஹிணியில் உள்ள தனியார் வங்கி கால் சென்டர் ஊழியர். கடந்த, 5ம் தேதி இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ஜனக்புரியில் பேராசிரியர் ஜோகிந்தர் மார்க்கில் ஜல் போர்டு தோண்டி வைத்திருந்த, 15 அடி பள்ளத்தில் பைக்குடன் விழுந்து உயிரிழந்தார். குடும்பத்தினர் இரவு முழுதும் தேடிய நிலையில், மறுநாள் காலை 8:00 மணிக்கு கமல் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜனக்புரி போலீசார், ஜல் போர்டு பணிகளை செய்து வரும் சப்-கான்ட்ராக்டர் ராஜேஷ் குமார் பிரஜாபதி,47,ஐ நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து, மேற்கு மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் தாரடே சரத் பாஸ்கர் கூறியதாவது:
கமல் விழுந்த கிடந்த பள்ளம் அருகே நள்ளிரவில் சென்ற ஒரு குடும்பத்தினர், பள்ளத்தில் பைக்குடன் ஒருவர் கிடப்பது குறித்து அந்த இடத்தில் பணியில் இருந்த பாதுகாவலருக்கும், அருகில் கூடாரத்தில் வசித்த ஒருவரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். கான்ட்ராக்டர் பிரஜாபதியால் பணியமர்த்தப்பட்ட அந்தப் பாதுகாவலர், உடனடியாக இளநிலை ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த இளநிலை ஊழியர், அதிகாலை 12:22 மணிக்கு பிரஜாபதியை மொபைல் போனில் அழைத்து சம்பவ இடத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் வந்த பிரஜாபதி, பள்ளத்துக்குள் பைக்குடன் ஒரு வாலிபர் கிடப்பதை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். போலீசுக்கோ தீயணைப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்கவில்லை.
கடந்த, 5ம் தேதி நண்பகலில் 15 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலைக்கு நடுவில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தபோதிலும், தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது பாதுகாப்பு காவலரோ இல்லை. பள்ளம் தோண்டிய பின் ஆய்வு செய்த ஜல் போர்டு அதிகாரிகளும் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய தவறி விட்டனர். கான்ட்ராக்டர், சப்-கான்ட்ராக்டர் மற்றும் டில்லி ஜல் போர்டு அதிகாரிகள் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் ஆய்வு சம்பவ இடத்தில் நேற்று மீண்டு ஆய்வு செய்த டில்லி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த விவகாரம் விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா வழிகாட்டுதல்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுறுத்தல்படி, பணியில் அலட்சியமாக இருந்த டில்லி ஜல் போர்டு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவம் மிகுந்த வலியும் துக்கமும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞனை திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனால், முதல்வர் ரேகா குப்தா இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறார்.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் என்ற முறையில், மாநகராட்சி மற்றும் பிற துறைகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். இந்தச் சம்பவத்துக்குப் பின், எந்தக் குறைபாடுகளும் அல்லது அலட்சியமும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

