ADDED : மார் 25, 2024 06:53 AM

பெங்களூரு: கர்நாடக ராஜ்ய பிரகதி கட்சி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, எந்தவித நிபந்தனையும் இன்றி, இன்று பா.ஜ.,வில் இணைகிறார். 'கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதற்காகவே இணைகிறேன்' என ஜனார்த்தன ரெட்டி தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சி அமைப்பதில், 'பல்லாரி சகோதரர்கள்' என்று அழைக்கப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலுவுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால், முறைகேடாக இரும்புதாது வெட்டி கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி, சிறையில் அடைக்கப்பட்டார். அவர், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இணைய முயற்சித்தார். ஆனால் கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால் கே.ஆர்.பி., என்ற கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை துவக்கி, கொப்பால் மாவட்டம், கங்கவாதியில் நின்று எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கும்படி, அக்கட்சியினர் கேட்டிருந்தனர். ஆனால், தேர்தலுக்கு முந்தைய நாள், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்த ரெட்டி, தேர்தல் நாளன்று அக்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். இதனால் பா.ஜ., மேலிடம் கோபம் அடைந்தது.
ஆனாலும், அவரை கட்சியில் இணைப்பது குறித்து திரைமறைவில் பேச்சு நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஜனார்த்தன ரெட்டி சந்தித்து பேசினார். இதில், அவரது கட்சியை பா.ஜ.,வில் இணைப்பது என்பது உறுதியானது.
பா.ஜ.,வில் இணைவது தொடர்பாக, நேற்று பெங்களூரில் தன் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
இன்று காலை 10:00 மணிக்கு, பெங்களூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் மாநில தலைவர் விஜயேந்திரா, மேலிட தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால் முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறேன்.
மீண்டும் தாய் கட்சியுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு உலகளவில் நற்பெயர் பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம். நரேந்திர மோடி மூன்றாவது முறையாகபிரதமாக வேண்டும்; அதற்காக பாடுபடுவேன்.
நானும், ஸ்ரீராமுலுவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அவருடன் இன்னமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் கட்சி துவக்கியபோது யாரையும் வந்து சேரும்படி அழைக்கவில்லை. என் சகோதரர்களை கூட அழைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி கூறுகையில், ''அவர் பா.ஜ.,வில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சிக்கு புதிய சக்தி கிடைத்தது போன்று உள்ளது. அவர் என் தம்பி. மனக்கசப்பு இருக்கும், போகும். இனி அது சரியாகவிடும்,'' என்றார்.
பல்லாரியிலும், கொப்பாலிலும் ஜனார்த்தன ரெட்டியின் செல்வாக்கை பயன்படுத்தி, பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, அக்கட்சி இத்தகைய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

