ADDED : மார் 26, 2024 12:52 AM

பெங்களூரு,:தென் மாநிலங்களில் முதல் முறையாக கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், பல்லாரியின் சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி. அவர், சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறை சென்றதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின், அவரை பா.ஜ., தரப்பு கண்டுகொள்ளவில்லை.
இதனால், கடந்த சட்டசபை தேர்தலின் போது, கே.ஆர்.பி., எனும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை துவக்கி, கொப்பால் மாவட்டம், கங்காவதியில் ஜனார்த்தன ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மனைவி அருணா உட்பட மொத்தம் 102 வேட்பாளர்கள் களமிறங்கி தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஜனார்த்தன ரெட்டி சந்தித்து, பா.ஜ.,வில் இணைய சம்மதம் தெரிவித்தார்.
இதன்படி, நேற்று பெங்களூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு தன் மனைவியுடன் சென்று, அக்கட்சியில் இணைந்தார்; கே.ஆர்.பி., கட்சியையும் பா.ஜ.,வுடன் இணைத்தார். மாநில தலைவர் விஜயேந்திரா, கணவர், மனைவிக்கு கட்சிக்கொடி வழங்கி வரவேற்றார்.
ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''பா.ஜ.,வுடன் கே.ஆர்.பி., கட்சியை இணைத்துள்ளேன். என் உடலில் ஓடும் ரத்தத்தில் பா.ஜ., உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்காகவும் கட்சியில் இணைந்துள்ளேன்,'' என்றார்.
