அமைச்சர் கன்னத்தில் 'பளார்' ஜனார்த்தன ரெட்டி விருப்பம்
அமைச்சர் கன்னத்தில் 'பளார்' ஜனார்த்தன ரெட்டி விருப்பம்
ADDED : ஏப் 14, 2024 07:15 AM

சித்ரதுர்கா: ''பா.ஜ.,வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் கன்னத்தில் அறைந்தது போன்றுதான். நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
நம் நாட்டின் பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு பிரதமர் மோடி வேண்டும். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். பண்டிகைகளை நாம், நமது குடும்பங்களுடன் கொண்டாடுகிறோம். நாட்டுக்காக குடும்பத்தையே தியாகம் செய்த மோடி, எல்லையில் நின்று, நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுகிறார்.
'இண்டியா' கூட்டணி எவ்வளவு முட்டி மோதினாலும், 100 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது. அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுவதில் அர்த்தம் இல்லை. அந்த ஓட்டுகள் வீணாகும்.
நம் நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். இத்தகைய சிறந்த தலைவரின் பெயரை கூறுவோரின் கன்னத்தில் அறைய வேண்டும் என, கன்னடம், கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு முதல்வர் சித்தராமையா, இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.
சிவராஜ் தங்கடகியின் கன்னத்தில் அறைய, எனக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அவரை போன்ற கீழ்த்தரமான நபர் நான் அல்ல. பா.ஜ.,வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், தங்கடகியின் கன்னத்தில் அறைந்தது போன்று தான்.
இவ்வாறு அவர்கூறினார்.

