ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை
ஜனதாதளம் தொண்டர்கள் கொலை வழக்கு; மா.கம்யூ., தலைவர் உட்பட 6 பேர் விடுதலை
ADDED : ஆக 21, 2024 11:36 PM
பாலக்காடு : ஜனதாதளம் தொண்டர்களை ஜீப் மோத விட்டு கொலை செய்த வழக்கில், மா.கம்யூ., கட்சி தலைவர் உட்பட, 6 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டிதாவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவதாஸ், கருப்பசாமி. இவர்கள் ஜனதாதளம் கட்சி தொண்டர்கள்.
கடந்த, 2002ல் இவர்கள் பைக்கில், சித்தூர் நிலம்பதி பாலம் அருகே சென்ற போது, பின் தொடர்ந்து வந்த ஜீப் மோதியது. இதில் இருவரும் பலியாயினர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சித்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அரசியல் விரோதம் காரணமாக மா.கம்யூ., கட்சியினர் ஜீப் மோத விட்டு இருவரையும் கொலை செய்ததும், இதன் பின்னணியில் தற்போதைய மா.கம்யூ. கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, தொண்டர்களான அனில், கிருஷ்ணன் குட்டி, சண்முகன், பார்த்தன், கோகுல்தாஸ் ஆகியோர் இருப்பதும், என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த இந்த வழக்கு விசாரணை, பாலக்காடு விரைவு நீதிமன்றம் --2ல் நடந்தது.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் செய்ததற்கான போதிய ஆவணங்கள், அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறிய நீதிபதி ஜெய்வந்த், குற்றம் சாற்றப்பட்ட, 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.