பல்லாரியில் 'ஜீன்ஸ் தொழிற்சாலை' விவகாரம்; பிரசாரத்துக்கு பயன்படுத்தும் பா.ஜ., - காங்.,
பல்லாரியில் 'ஜீன்ஸ் தொழிற்சாலை' விவகாரம்; பிரசாரத்துக்கு பயன்படுத்தும் பா.ஜ., - காங்.,
ADDED : ஏப் 30, 2024 10:21 PM
பெங்களூரு: பல்லாரியில் முன்னர் பிரசாரத்தின் போது சட்ட விரோத சுரங்க தொழில் முதன்மையாக கருதப்பட்டது. தற்போது 'ஜீன்ஸ்' தொழிற்சாலை அமைக்கும் விவகாரத்தை பா.ஜ., காங்கிரஸ் கையில் எடுத்துள்ளன. இரு கட்சிகளும் மாறி, மாறி பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
பல்லாரி சகோதரர்கள்
கர்நாடகாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல்லாரி என்றால் அது பா.ஜ., சகோதரர்களின் மாவட்டமாக கருதப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சட்ட விரோத நடவடிக்கையால், நாடு முழுதும் ஜனார்த்தன ரெட்டி அறியப்பட்டார். இது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது, 'ஜீன்ஸ்' தொழிற்சாலை விவகாரத்தை பா.ஜ., காங்கிரஸ் தேர்தல் பிரசாரமாக்கி வருகின்றன.
'ஜீன்ஸ்' மாவட்டம்
கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பல்லாரியில் 5,000 கோடி ரூபாயில் 'ஜீன்ஸ்' தொழிற்சாலை அமைக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் அறிவித்திருந்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, ஜீன்ஸ் பூங்கா அமைப்பது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ், நம் நாடு மற்றும் வெளிநாடுகளிலும் பிரபலமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜீன்சுக்கு, நாடு முழுதும் தனி வரவேற்பு உள்ளது.
இங்கு 500க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் யூனிட்கள் உள்ளன. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள யூனிட்கள், பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இறக்குமதி, ஏற்றுமதி விவகாரத்தில் பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், தொழிலுக்கு மிகவும் தேவையான தண்ணீர் வசதியை அரசோ, உள்ளாட்சி நிர்வாகமோ செய்து தரவில்லை.
இதனால் தற்போது ஜீன்ஸ் தொழில் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது ஜீன்ஸ் தொழில் வளர்ச்சி பற்றி பேசும் தலைவர்கள், தேர்தல் முடிந்த பின், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போதும் தேர்தலில், ஜீன்ஸ் தொழில் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, இரு கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.