ADDED : ஜூலை 20, 2024 02:42 AM

பெங்களூரு: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த 12 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என 55 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கட்டுக் கட்டாக பணம், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக, 12 அதிகாரிகள் மீது, லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதன்படி, துமகூரு தொழில் மற்றும் வணிகவரி துறை கூடுதல் இயக்குனர் முத்துகுமார், மாண்டியா தொழிலாளர் நலத்துறை அதிகாரி சேத்தன் குமார், மங்களூரு மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் உட்பட 12 அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரு, யாத்கிர், ஷிவமொகா, துமகூரு, மங்களூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களில் 55 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது, 12 பேரின் வீடுகளில் இருந்தும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள், கைக்கடிகாரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

