ADDED : மே 16, 2024 12:28 AM

ராஞ்சி: ஜார்க்கண்டில் பண மோசடி வழக்கில் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ஆலம்கீர் ஆலம், 70, மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தன.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் அமைச்சர் ஆலமின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி, 32 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அமைச்சரின் தனி செயலர் சஞ்சீவ் குமார் லால், 52, வீட்டுப்பணியாளர் ஜஹாங்கீர் ஆலம், 42, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் ஆலம்கீர் ஆலமுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதன் பேரில் நேற்று முன்தினம் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் ஆஜரான அமைச்சரிடம் ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
நேற்று இரண்டாவது நாளாக ஆறு மணிநேரத்துக்கும் மேலாக அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் ஆலம்கீர் ஆலமை அதிகாரிகள் கைது செய்தனர்.