தம்பியை சேர்த்ததால் பா.ஜ.,வுக்கு முழுக்கு: தயாராகும் மாலிகய்யா
தம்பியை சேர்த்ததால் பா.ஜ.,வுக்கு முழுக்கு: தயாராகும் மாலிகய்யா
ADDED : ஏப் 18, 2024 04:06 AM

கலபுரகி : தன் சகோதரர் நிதின் குத்தேதாரை, பா.ஜ.,வில் சேர்த்ததால் கோபத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மாலிகய்யா குத்தேதார், காங்கிரசுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலபுரகியின் செல்வாக்குமிக்க தலைவரான மாலிகய்யா குத்தேதார், காங்கிரசில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்கிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு வலை விரித்துள்ளது. மாலிகய்யா குத்தேதாரின் தம்பி நிதின் குத்தேதார், பா.ஜ.,வுக்கு வர விரும்பினார். ஆனால், அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என, மாலிகய்யா குத்தேதார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை பொருட்படுத்தாமல், நிதின் பா.ஜ.,வில் சேர்க்கப்பட்டார். இதனால், கொதிப்படைந்த மாலிகய்யா குத்தேதார், பா.ஜ.,விலிருந்து விலகி காங்கிரசுக்கு செல்ல ஆலோசிக்கிறார்.
இதுதொடர்பாக, ஆலோசனை நடத்த 19ல் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்துகிறார். இதுகுறித்து மாலிகய்யா குத்தேதார் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது மகன் விஜயேந்திராவும், பா.ஜ., தலைவர்கள் ஈஸ்வரப்பா, பிரதாப் சிம்ஹா, கரடி சங்கண்ணாவுக்கு 'சீட்' நிராகரித்தனர். பா.ஜ., அரசு இருந்தபோது, ஊழல் எல்லைமீறியது.
இது பற்றி அருண் சிங்கின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, வாக்குறுதித் திட்டங்களால் அல்ல; பா.ஜ.,வின் ஊழலால் தான்.
பா.ஜ.,வை விட்டு விலக வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, இம்மாதம் 19ல் இறுதி முடிவு எடுப்பேன்.
பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசில் இணையும்படி தொண்டர்கள் பலரும், ஆலோசனை கூறியுள்ளனர். துணை முதல்வர் சிவகுமாரும் காங்கிரசுக்கு வரும்படி அழைப்பு விடுத்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

