ADDED : மே 27, 2024 07:30 AM

தார்வாட்: ''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கர்நாடகாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் புகலிடமாக மாறிவிட்டது,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம் சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு, ராமேஸ்வரம் கபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. ஆனால், காஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறினர். இதற்கு காங்கிரசின் மோசமான நிர்வாகம் தான் காரணம்.
இந்த அரசு வந்த பின், மாநிலத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாநில அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், செயல்படுகின்றனர்.
போதை புழக்கம்
ஹூப்பள்ளி, பெங்களூரு, மங்களூரு ஆகிய நகரங்களில் அதிக போதை பொருள் வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாநிலத்தில் போதை மாபியா தலை துாக்குகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கூறி பிரதமர், வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி, அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார். இதை போலீசார் அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டும். வக்கீலான சித்தராமையாவுக்கு இது தெரியாதா?
மத்திய அரசு
பொதுவாக மத்திய அரசுக்கு, மாநில அரசு ஒரு தகவலை அனுப்பினால், நடவடிக்கை எடுக்க 10 நாட்கள் அவகாசம் இருக்கும். அதன்படி, பிரஜ்வல் வழக்கு வெளிச்சத்துக்கு வந்து, ஒரு மாதம் கடந்த பின், மே 21ம் தேதி மத்திய அரசுக்கு, எஸ்.ஐ.டி., தகவல் அளித்து உள்ளது.
இதையடுத்து, மத்திய அரசு, மே 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க இன்னும் எட்டு நாட்கள் உள்ளன.
வெளிநாட்டில் உள்ள பிரஜ்வலை மாநில அரசு கைது செய்து, தண்டிக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல, மாநில அரசு அனுமதித்தது ஏன். தற்போது உள்நோக்கத்துடன், மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

