வானத்தில் இருந்து குதித்தாரா? அமைச்சர் மீது வினய் காட்டம்!
வானத்தில் இருந்து குதித்தாரா? அமைச்சர் மீது வினய் காட்டம்!
ADDED : ஜூலை 01, 2024 09:16 PM

பெங்களூரு : “கவுரவம் இல்லாத இடத்தில், நாங்கள் ஏன் இருக்க வேண்டும்; அமைச்சர் மேலே இருந்து குதித்தாரா?” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி தெரிவித்தார்.
நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கும், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் வினய் குல்கர்னிக்கும் இடையே, சமீப நாட்களாக பனிப்போர் ஏற்பட்டுள்ளது. பைரதி சுரேஷ் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுகிறார் என, வினய் குல்கர்னி கொதிப்பில் உள்ளார்.
இதற்கு முன்பு டில்லிக்குச் சென்று, காங்., மேலிட தலைவர்களை சந்தித்த வினய் குல்கர்னி, பைரதி சுரேஷ் மீது புகார் அளித்தார். ஆனாலும் தன் போக்கை அமைச்சர் மாற்றவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள வினய் குல்கர்னி, ராஜினாமா செய்யவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று வினய் குல்கர்னி அளித்த பேட்டி:
கவுரவம் இல்லாத இடத்தில், நான் ஏன் இருக்க வேண்டும்? நாங்கள் ஒத்துழைப்பு அளித்ததால் தான், அவர் (பைரதி சுரேஷ்) அமைச்சராக இருக்கிறார். அவர் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. அவரும் முதலில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தானே. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். நான் பயப்பட மாட்டேன். தேவைப்பட்டால் ஆவணங்களையும் சமர்ப்பிப்பேன். நான் டில்லிக்கு சென்றது உண்மைதான். மேலிட தலைவர்களிடம், என்ன கூற வேண்டுமோ, அதை கூறியுள்ளேன்.
முதல்வர், துணை முதல்வர் மாற்றம் விவாதம் தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளோ, எம்.எல்.ஏ.,க்களோ கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு, நோட்டீஸ் அளிக்க வேண்டும். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.