இளநிலை 'க்யூட்' நுழைவு தேர்வு விடை குறிப்புகள் வெளியாகின
இளநிலை 'க்யூட்' நுழைவு தேர்வு விடை குறிப்புகள் வெளியாகின
ADDED : ஜூலை 26, 2024 06:08 AM
புதுடில்லி: இளநிலை க்யூட் நுழைவுத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் நேற்று வெளியாகின. இவற்றை தொடர்ந்து, முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பல்கலைகளில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர, க்யூட் எனப்படும் பொது பல்கலை நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான இளநிலை க்யூட் தேர்வு, மே 15ல் துவங்கி 29 வரை நடந்தது; 13.48 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 15 பாடங்களுக்கு பேனா - பேப்பர் முறையிலும், 48 பாடங்களுக்கு கணினி முறையிலும் தேர்வு நடந்தது.
தேர்வுக்கான விடைக்குறிப்புகள் மிகவும் தாமதமாக கடந்த 7ல் வெளியாகின. இவற்றில் சில குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.
இதை தொடர்ந்து, 1,000 மாணவர்களுக்கு ஜூலை 19ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இறுதி விடைக்குறிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. 'முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்' என, என்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
இளநிலை க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜூன் 30ல் வெளியிட திட்டமிடப்பட்டது. 'நீட்' மற்றும் யு.ஜி.சி., - நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் நாடு முழுதும் சர்ச்சையானதை அடுத்து, க்யூட் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.