வேலைநிறுத்த போராட்டம் தொடரும் ஜூனியர் டாக்டர்கள் திட்டவட்டம்
வேலைநிறுத்த போராட்டம் தொடரும் ஜூனியர் டாக்டர்கள் திட்டவட்டம்
ADDED : செப் 11, 2024 01:42 AM

கோல்கட்டா,மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார்.
நீதி கேட்டு, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயிற்சி பெண் டாக்டர் படுகொலை விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இவ்வழக்கின் விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் டாக்டர்கள், தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு செப்., ௧௦ மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, உத்தரவிட்டது.
'அவ்வாறு, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினால், ஜூனியர் டாக்டர்கள் மீது பணியிடமாற்றம் உட்பட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது' எனவும், மாநில அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
எனினும், உச்ச நீதிமன்ற கோரிக்கையை ஏற்காமல், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி பெண் டாக்டர் படுகொலை சம்பவத்தையடுத்து, மாநில சுகாதாரச் செயலர் மற்றும் சுகாதாரக் கல்வி இயக்குனர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யக்கோரி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோல்கட்டாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மாநில சுகாதாரத்துறை அலுவலகத்தை நோக்கி, ஜூனியர் டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன பேரணி சென்றனர்.
அப்போது பேரணியில் பங்கேற்ற டாக்டர் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை, எங்களின் போராட்டம் தொடரும்' என்றார்.
இதற்கிடையே, பேச்சு நடத்த வரும்படி போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு முதல்வர் மம்தா சார்பில் சுகாதாரத்துறை செயலர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஏற்க மறுத்த பயிற்சி டாக்டர்கள், சுகாதார செயலருக்கு எதிராக தான் போராட்டம் நடத்துகிறோம். பேச்சு நடத்த அவரே அழைப்பு விடுப்பது எங்களை அவமதிக்கும் செயல் என்றனர்.