இன்னும் 5 ஆண்டுகள் தான்... இனி வெள்ள பாதிப்பே இருக்காது; மத்திய அரசின் பலே திட்டம்
இன்னும் 5 ஆண்டுகள் தான்... இனி வெள்ள பாதிப்பே இருக்காது; மத்திய அரசின் பலே திட்டம்
ADDED : செப் 13, 2024 01:29 PM

புதுடில்லி: மழை பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, இன்னும் 5 ஆண்டுகளில் செயற்கை மழை திட்டத்தை அறிமுகப்படுத்துவற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவு மற்றும் கோடை வெயிலும் பருவம் தவறிப் போய் விடுகிறது. இதனால், அளவுக்கு அதிகமாக பெய்யும் மழையினால், நகரங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அண்மையில், தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதேபோல, தற்போது, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் பெய்த பேய் மழையின் காரணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
எனவே, அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால், பேரிடர்களுக்கு முன்பு, தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வசதியாக, மழையை துல்லியமாக கணிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், இன்னும் 5 ஆண்டுகளில் மழையை, தேவைப்படும்போது தடுத்து நிறுத்தவோ, அல்லது வரவழைக்கவோ முடியும் என்று புவி அறிவியியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக ரவிச்சந்திரன் கூறுகையில், 'செயற்கை முறையிலான மழையை உண்டாக்கவோ, நிறுத்துவதற்கோ தேவையான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 18 மாதங்களில் இதற்கான ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு விடும். 5 ஆண்டுகளில் செயற்கையாக பருவநிலை மாற்றத்தை நம்மால் ஏற்படுத்தி விட முடியும்.
இது சவாலான விஷயம் தான். பலமுறை ஆய்வு செய்தும், குறிப்பிட்ட அளவிலான தீர்வே கிடைத்தது. அமெரிக்கா, கனடா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த செயற்கை மழை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. மழையின் அளவை குறைத்து, விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, செயற்கை மழை திட்டத்தை உண்டாக்குகின்றனர்.
மேலும், மழை, வெயில் உள்ளிட்ட காலநிலை தொடர்பான விபரங்களை, சாட் ஜி.பி.டி., செயலி மூலம் செய்தியாகவோ, ஆடியோவாகவோ உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது,' எனக் கூறினார்.

