கை கோர்த்த சித்தராமையா - எடியூரப்பா சீனிவாச பிரசாத் நினைவஞ்சலியில் ஆச்சரியம்
கை கோர்த்த சித்தராமையா - எடியூரப்பா சீனிவாச பிரசாத் நினைவஞ்சலியில் ஆச்சரியம்
ADDED : மே 11, 2024 09:32 PM

மைசூரு: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு, கைகோர்த்துப் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையாவும், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அரசியல் ரீதியாக அடிக்கடி விமர்சனம் செய்து கொள்வது வழக்கம். இருவரும் கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவர்கள்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.
இதற்கிடையில், சமீபத்தில் மறைந்த பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத்துக்கு அவரது நலம் விரும்பிகள் சார்பில், மைசூரில் நேற்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், சித்தராமையாவும், எடியூரப்பாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் அரசியல் விரோதத்தை மறந்து, பேசிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து, அடிக்கடி பேசிக் கொண்டது, பார்வையாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஒரு காகிதத்தில் எடியூரப்பா ஏதோ எழுதிக் கொடுக்க, அதை சித்தராமையா ஆவலுடன் பார்த்து இருவரும் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டனர்.
கர்நாடகாவில் அரசியல் விரோதம் மறந்து, வெவ்வேறு தருணங்களில், இரு வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவது புதிது அல்ல.