ADDED : செப் 01, 2024 11:44 PM

வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால், மைசூரு மன்னராட்சி காலத்தின் சிறப்பம்சங்கள், வீர, தீர சாகசங்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே வந்து செல்லும். அதேபோன்று, காக்கன கோட்டையில் நடந்த யானைகள் பயிற்சியும் முக்கியமானது.
மைசூரு, ஹெச்.டி.கோட்டேவின், காக்கனகோட்டை இன்றைக்கும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இது விலங்குகள், பறவைகள், அபூர்வமான தாவரங்கள் நிறைந்துள்ள அற்புதமான வனமகும். மைசூரு மன்னர்கள் காலத்திலேயே, உள்நாடு, வெளிநாடுகளில் பிரசித்தி பெற்றிருந்தது.
மன்னர் ஆட்சி
காக்கன கோட்டை வனப்பகுதியில், யானைகளை பிடித்து, பழக்கி மைசூரு தசரா உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. மன்னராட்சி காலத்திலும், நாடு சுதந்திரம் பெற்ற பின் 1972 வரை, இங்கு யானைகள் பயிற்சி நடைபெற்றது.
கபினி ஆற்றில் சலசலவென சலங்கை சத்தம் போன்று பாயும் தண்ணீர், வானுயரத்துக்கு வளர்ந்து நிற்கும் மரங்கள், செடி, கொடிகள் இவைகளுக்கு நடுவில் அடைக்கலம் பெற்றுள்ள காட்டு யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டெருமை என, பல விதமான உயிரினங்கள், காக்கன கோட்டையை மெருகேற்றுகின்றன.
அரண்மனையில் நடக்கும் பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு யானைகள் தேவைப்படுவதாலும், விவசாயிகளின் பயிர்களை யானைகள் பாழாக்குவதை தவிர்க்கும் நோக்கிலும், யானைகளை பிடிப்பது வழக்கம்.
இங்கு காட்டு யானைகளை பிடிப்பதே, சுவாரஸ்யமான விஷயமாகும். ஆண்டுக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சி நடக்கும்.
அனுபவம் மிக்க நுாற்றுக்கணக்கான வேட்டைக்காரர்கள், தப்பட்டை அடிப்பவர்கள் காட்டுக்கு நடுவில் ஓரிடத்தில் கூடுவர்.
ஆதிவாசிகள்
வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து, வேட்டைக்காரர்கள் நன்கு அறிவர். எனவே யானைகளை பிடிக்க இவர்களை, மன்னர்கள் பயன்படுத்தினர். நிகழ்ச்சி நாளன்று, காட்டுக்குள் நுாற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில், தப்பட்டை, மேளம் அடித்து பெரும் சத்தம் எழுப்புவர்.
இந்த சத்தத்தை வைத்து யானைகள் மிரண்டு ஓடும். ஏற்கனவே வெட்டி தயார் செய்துள்ள பள்ளத்தில், யானைகளை இறங்கும்படி செய்வர்.
இவர்களுடன் ஆதிவாசிகளும் இருப்பர். அதன்பின் கயிற்றால் கட்டி, நாட்டுக்கு அழைத்து சென்று, பாகன் மூலமாக பழக்கப்படுத்தப்படும்.
கடந்த 1906ல், நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் நடந்த யானை பிடிக்கும் நிகழ்ச்சி வரலாற்று பிரசித்தி பெற்றதாக இருந்தது. அன்று பிரிட்டிஷ் ராணியும், அவரது கணவரும் மைசூரு அரண்மனைக்கு வந்திருந்தனர்.
மரத்தில் பரண்
அவர்களும் கூட யானை பிடிக்கும் சாகச நிகழ்ச்சியை, மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்களாம். நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்காக, மரத்தின் மீது பரண்கள் கட்டப்பட்டன. இதில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பர்.
இத்தகைய சுவாரஸ்யமான, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாக இருப்பது காக்கன கோட்டை. இதன் வரலாற்றை கேள்விப்படும் யாருக்குமே, இங்கு வர வேண்டும் என்ற ஆவல் தோன்றாமல் இருக்காது.
மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், காக்கன கோட்டைக்கு சென்றால் மனதுக்கு இதமான இயற்கைகளை ரசிக்கலாம். புது அனுபவத்தை பெறலாம்.
எப்படி செல்வது?
காக்கன கோட்டைக்கு செல்ல அதிகம் கஷ்டப்பட வேண்டியது இல்லை. ஹெச்.டி.கோட்டேவில் இருந்து, காக்கன கோட்டைக்கு செல்ல அரசு பஸ், தனியார் வாகன வசதி உள்ளது. ரயில் வசதியும் உள்ளது. இங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் ரயில் நிலையம் உள்ளது. சொந்த வாகனம் இருந்தால், இன்னும் ஜாலிதான்
- நமது நிருபர் -.