காளேன அக்ரஹாரா - நாகவாரா சுரங்க பணி 96 சதவீதம் நிறைவு
காளேன அக்ரஹாரா - நாகவாரா சுரங்க பணி 96 சதவீதம் நிறைவு
ADDED : செப் 01, 2024 11:31 PM

பெங்களூரு: காளேன அக்ரஹாரா - நாகவாரா மெட்ரோ பாதையில், சுரங்கம் தோண்டும் பணிகள், 96 சதவீதம் முடிந்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் இறுதியில், சுரங்கம் தோண்டும் பணிகள் முடிவடையும்.
இது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் டெய்ரி சதுக்கத்தில் இருந்து, நாகவாரா வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 21,249 மீட்டரில், 20,557 மீட்டர் துார பணிகள் முடிந்துள்ளன. 96 சதவீதம் சுரங்கம் தோண்டப்பட்டது.
சுரங்கம் தோண்ட ஒன்பது டி.பி.எம்., எனும் இயந்திரங்களில், ஏழு இயந்திரங்கள் சுரங்கம் தோண்டி முடித்தன. தற்போது துங்கா மற்றும் பத்ரா டி.பி.எம்.,கள் சுரங்கம் தோண்டுகின்றன.
இவைகள் மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாம் கட்டத்தின் கே.ஜி.ஹள்ளியில் இருந்து, நாகவராவை நோக்கி 938 மீட்டர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
துங்கா 85 சதவீதம் பணியை முடித்துள்ளது. செப்டம்பர் இறுதியில் பணி முடியும்.
பத்ரா டி.பி.எம்., 50 சதவீதம் பணியை முடித்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் இறுதியில் முடியும். இந்த இரண்டு டி.பி.எம்.,களும் பணியை முடித்தால், பிங்க் மெட்ரோ பாதையின் சுரங்க பாதை பணி முடிவடையும். சுரங்க பணிகள் முடிந்ததும் தண்டவாளம் அமைப்பது உட்பட மற்ற பணிகளை மேற்கொள்வோம்.
பெங்களூரு மெட்ரோ நிறுவனம் 13 கி.மீ., தொலைவிலான சுரங்கப்பாதையை, மூன்று கட்டங்களில் மேற்கொண்டுள்ளது. முதற் கட்டத்தில் ஷாதி மஹாலில் இருந்து, வெங்கடேசபுரா வரையிலும், இரண்டாம் கட்டத்தில் வெங்கடேசபுராவில் இருந்து கே.ஜி.ஹள்ளி வரையிலும் சுரங்க பாதை முடிந்தது.
தற்போது மூன்றாம் கட்டத்தில் கே.ஜி.ஹள்ளியில் இருந்து, நாகவாரா வரை சுரங்கம் தோண்டும் பணியை, துங்கா, பத்ரா டி.பி,எம்.,கள் துவக்கியுள்ளன. பணி முடிந்த இடத்தில், 'ரிங்' பொருத்தப்படுகிறது.
காளேன அக்ரஹாரா - நாகாவரை மொத்தம் 21.26 கி.மீ., துாரம் உள்ளது. இதில் 18 மெட்ரோ ரயில் நிறுத்தங்கள் இருக்கும். இவற்றில் 13.76 கி.மீ., தொலைவிலான சுரங்கப்பாதையில், 12 நிலையங்கள் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.