பசுமை ஆர்வலர்களின் சொர்க்கம் காளி புலிகள் காப்பகம்
பசுமை ஆர்வலர்களின் சொர்க்கம் காளி புலிகள் காப்பகம்
ADDED : ஆக 22, 2024 04:22 AM

உத்தர கன்னடா மாவட்டம், தாண்டேலியில் காளி புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்களில், இதுவும் ஒன்று. அடர்ந்த வனப்பகுதியில் வானுயர்ந்த மரங்கள், படர்ந்து கிடக்கும் செடி, கொடிகள், பறவைகளின் கீச் கீச் சத்தம், இதமான காற்று என மனம் விரும்பும் சொர்க்கமாக கருதப்படுகிறது.
ஹளியால், ஜொய்டா, கார்வார் ஆகிய மூன்று தாலுகாக்களில் 1,300 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆரம்பத்தில், தாண்டேலி வன விலங்கு சரணாலயமாக 1956 மே 10ல் அறிவிக்கப்பட்டது. பின், 1987 செப்டம்பர் 2ம் தேதி, அன்ஷி தேசிய பூங்காவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புலிகள் அதிகமாக காணப்பட்டதால், 2007ல், 130 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டு, அன்ஷி தாண்டேலி புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. வனப்பகுதிக்கு நடுவில் காளி நதி பாய்ந்து செல்வதால், 2015 டிசம்பரில் காளி புலிகள் காப்பகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புலிகளுடன், யானைகள், கறுஞ்சிறுத்தைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், சோம்பல் கரடிகள், காட்டுப்பன்றிகள், புள்ளி மற்றும் கொம்பு மான்கள், காட்டு நாய்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால், அரிய வகை தாவரங்களும், ஊர்வன இனங்களும், 200க்கும் அதிக வகையான பறவைகள் உள்ளன.
இத்தகைய வன விலங்குகளையும், பறவைகளையும், மிருக காட்சி சாலையில் பார்ப்பதை விட, அதன் இருப்பிடத்தில் சென்று பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர்.
இதற்காக, ஜங்கிள் சபாரி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6:00 மணி முதல், 8:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரையிலும் காட்டினுள் சபாரி அழைத்து செல்லப்படுகின்றனர். 15 நிமிடங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும். ஒரு நபருக்கு 450 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியாக ஜீப் சபாரியும் நடக்கிறது.
மழை காலங்களில் பச்சை பசேல் என்று காணப்படுவதால், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருவர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும். அருகிலேயே தங்குவதற்கு தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. தாண்டேலி வனப்பகுதியில் வாகனங்களில் செல்வதை, குழந்தைகள் முதல், பெரியோர் வரை அனைவரும் விரும்புவர்.
ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து, 110 கி.மீ., துாரத்திலும்; பெங்களூரில் இருந்து, 500 கி.மீ., துாரத்திலும் உள்ளது. காளி புலிகள் காப்பகம் அருகில், சாத்தோடி நீர்வீழ்ச்சி, சைந்தேரி பாறைகள், கொடசள்ளி அணை உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருப்பதால், சொந்த வாகனத்தில் செல்வது நல்லது.
- நமது நிருபர் -