அக்டோபர் 26, 27ம் தேதிகளில் பெங்களூரில் கம்பாலா போட்டி
அக்டோபர் 26, 27ம் தேதிகளில் பெங்களூரில் கம்பாலா போட்டி
ADDED : ஆக 12, 2024 07:17 AM

பெங்களூரு: பெங்களூரில் அக்டோபர் 26, 27ம் தேதிகளில், கம்பாலா போட்டி நடக்க உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கேரளாவின் காசர்கோடுவில் கம்பாலா போட்டி நடக்கிறது. ஒரு ஜோடி எருதுகளை ஏரில் பூட்டி, சேறும், சகதியும் நிறைந்த பாதையில் ஓட வைப்பர். எந்த ஜோடி எருதுகள் வேகமாக ஓடுகிறதோ, அதன் உரிமையாளர்களுக்கு பரிசு கொடுப்பர்.
தட்சிண கன்னடா, உடுப்பி, காசர்கோடுவில் மட்டுமே நடந்த, கம்பாலா போட்டிகள் கடந்த ஆண்டு நவம்பர் 25, 26ம் தேதிகளில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்தன.
மொத்தம் 200 ஜோடி காளைகள் போட்டியில் பங்கேற்றன. எதிர்பார்த்ததை விட, நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு நாட்களில் 5 லட்சம் பேர், கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் 2024 - 2025 ம் ஆண்டுகளுக்கான கம்பாலா போட்டிகள் குறித்து, நேற்று முன்தினம் மங்களூரு மூடபித்ரியில் ஆலோசனை நடந்தது.
கம்பாலா போட்டி கமிட்டி தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் எருதுகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நடப்பாண்டு அக்டோபர் முதல் 2025 ஏப்ரல் 19 வரை 25 இடங்களில், போட்டிகள் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
முதல் கம்பாலா போட்டி அக்டோபர் 26ம் தேதி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் துவங்குகிறது. அன்றும், மறுநாளும் நடக்கிறது. கடைசி போட்டி ஏப்ரல் 19ம் தேதி ஷிவமொகாவில் துவங்கி இரு நாட்கள் நடக்கிறது.
ஷிவமொகாவில் கம்பாலா போட்டி நடக்க இருப்பது, இதுவே முதல் முறை.

