ADDED : ஜூன் 29, 2024 11:26 PM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை, காங்கிரசில் பெறும் சூறாவளியை கிளப்பியுள்ளது. சிவகுமார் முதல்வராகும் காலம் கூடி வந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எந்த கூட்டணியும் இல்லாமல், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிந்ததால், எந்த இடையூறும் இல்லாமல், ஐந்தாண்டு சுமூகமாக இருக்கும் என, கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, முதல்வர் மாற்றம் குறித்த சர்ச்சை எழுந்தது.
பெரும் தலைவலி
சிவகுமார் முதல்வராவார் என அவரது ஆதரவாளர்களும், ஐந்தாண்டும் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என அவரது ஆதரவாளர்களும் குரல் கொடுக்க துவங்கினர். இது கட்சித் தலைவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் வந்ததால், வாயை திறக்கக் கூடாது என, மேலிடம் கட்டளையிட்டது. இதனால் தலைவர்கள், அமைச்சர்கள் மவுனமாக இருந்தனர்.
லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த அளவில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அமைச்சர்களின் வாரிசுகளே தோல்வியைத் தழுவினர். குறிப்பாக துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ், எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தார்.
தோல்விக்கான காரணங்களை தன்னாய்வு செய்வதற்கு பதிலாக, முதல்வரை மாற்ற வேண்டும், கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என, கூறி சில அமைச்சர்கள் சர்ச்சையை கிளப்புகின்றனர்.
மடாதிபதிகள் குரல்
கர்நாடக மாநில அரசியல் நிலவரங்களை கவனித்தால், துணை முதல்வர் சிவகுமாருக்கு விரைவில் முதல்வர் நாற்காலியில் அமர்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்காக சில மடாதிபதிகளும் குரல் கொடுக்கின்றனர். இது முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.
அரசியல் ரீதியில் 'கனகபுரா பன்டே' என, அழைக்கப்படும் சிவகுமாருக்கு, முதல்வராகும் தகுதி உள்ளது. ஆனால் அவருக்கு சில மைனஸ் பாயிண்டுகளும் உள்ளன.
பாசிடிவ் பாயின்டுகள்
l நிர்வாகத்திறன் கொண்டவர். மாநில காங்., தலைவராக தன் திறமையை நிரூபித்துள்ளார். கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். சட்டசபை தேர்தலில் கட்சிக்கு 135 தொகுதிகள் கிடைக்க, இவரது பங்களிப்பு அதிகம். கட்சியில் ஒழுங்கை கொண்டு வந்தார். எதிராளிகளை பணிய வைக்கும் அளவுக்கு, போராட்டம் நடத்துவதில் கைதேர்ந்தவர்.
l காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர்களிடம், இவர் மீது நல்ல கருத்து உள்ளது. மாவட்ட சுற்றுப்பயணம் செய்த போது, இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். இளம் தொண்டர்களின் நம்பிக்கையை பெற்றவர்.
l சிவகுமாருக்கு, மேலிடத்தின் சில தலைவர்களின் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இவர் மீது சோனியாவுக்கு, நல்ல எண்ணம் உள்ளது. பிரியங்கா குடும்பத்தினருடன் நல்லுறவு வைத்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடனும் நட்புறவு நன்றாக உள்ளது.
l சட்டவிரோத பணப்பரிமாற்றம் குற்றச்சாட்டில், சிவகுமார் சிறைக்கு சென்றவர். ஆனால் அது இவருக்கு எந்த விதத்திலும் பின்னடைவு ஏற்படுத்தவில்லை. கட்சிக்காக இவர் சிறைக்கு சென்றதாக, சில தலைவர்கள் கருதுகின்றனர். சிவகுமார் திஹார் சிறையில் இருந்த போது, இவரை சோனியா நேரில் சென்று தைரியம் கூறினார்.
l ஆப்பரேஷன் தாமரை நடந்த போது, குஜராத் எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அளித்தது, கட்சி அபாயத்தில் இருந்த போது, கட்சியின் உத்தரவுக்கு கீழ்படிந்தது போன்ற விஷயங்கள், மேலிடத்திடம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
மைனஸ் பாயின்டுகள்
l துணை சிவகுமார் மீது, சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு உள்ளது. சி.பி.ஐ., விசாரணையை எதிர் கொண்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டினால், வருங்காலத்தில், அவர் மேலும் பிரச்னையில் சிக்கலாம். இது அவரது முதல்வர் கனவுக்கு, முட்டுக்கட்டை போடலாம்.
l சிவகுமாருக்கு கட்சி மேலிட தலைவர்களுடன், நல்லுறவுடன் இருந்தாலும், மாநில காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன், நல்லுறவு இல்லை. சித்தராமையாவிடன் அடையாளம் காணப்படும் சில தலைவர்களுடன், கருத்து வேறுபாடு உள்ளது.
l இவருக்கு பழைய மைசூரை தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில், மக்களின் ஆதரவு இல்லை. வட மாவட்டங்கள், கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களில், மக்களின் ஆதரவை பெறவில்லை. ஆனால் சித்தராமையாவுக்கு, மாநிலம் முழுதும் பல்வேறு பிரிவு மக்களின் ஆதரவு உள்ளது. இலக்கியவாதிகள், எழுத்தாளர்களும் கூட, இவருக்கு பக்கபலமாக நிற்கின்றனர். இவர்களின் ஆதரவை சிவகுமாரால் பெற முடியவில்லை.
l சிவகுமார் மீதான குற்றச்சாட்டுகளில், கோபமும் ஒன்றாகும். இவரது நடவடிக்கை, பேச்சு, செயல்பாடு கட்சியில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
l சித்தராமையாவுக்கு கொள்கைப்பிடிப்பு உள்ளது. ஆனால் சிவகுமாருக்கு இல்லை என்ற கருத்து, கட்சியில் உள்ளது. பா.ஜ.,வை எதிர்கொள்ள, கொள்கைப்பிடிப்புடன் சமரசம் செய்து கொள்ள கூடாது. சித்தராமையாவுடன் ஒப்பிட்டால், சிவகுமாருக்கு அந்த பிடிப்பு இல்லை.