ADDED : செப் 03, 2024 12:13 AM

புதுடில்லி: 'நெட்பிளிக்ஸ்' ஓ.டி.டி., தளத்தில் வெளியான, ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் சீரிஸ் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைமை அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
கடந்த 1999ல், நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.
நிபந்தனை
அங்கு விமானப் பயணியரை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனை விதித்தனர்.
இதன்படி மூன்று பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பின், விமானப் பயணியர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் சீரிசை, பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கி உள்ளார்.
நடிகர்கள் விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா உள்ளிட்டோர் நடித்த இந்த வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் சமீபத்தில் வெளியானது.
இந்த வெப் சீரிசில் இடம்பெற்றுள்ள கடத்தல்காரர்களின் கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்து பெயர்
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், ஹிந்து பெயரை எப்படி வைக்கலாம் என, சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், ஐ.சி., 814: தி காந்தஹார் ஹைஜாக் வெப் சீரிசுக்கு எதிராகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் அவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெப் சீரிசில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி, நெட்பிளிக்ஸ் இந்தியா தலைமை அதிகாரிக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், நேற்று சம்மன் அனுப்பியது.