கங்கனாவின் 'எமர்ஜென்சி' படம் வழக்கால் வௌியாவதில் சிக்கல்
கங்கனாவின் 'எமர்ஜென்சி' படம் வழக்கால் வௌியாவதில் சிக்கல்
ADDED : செப் 03, 2024 12:32 AM

ஜபல்பூர்: எமர்ஜென்சி படத்தில் சீக்கியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க நடிகை கங்கனா ரணாவத், மத்திய அரசு மற்றும் திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளிட்டோருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடவடிக்கை
முன்னாள் பிரதமர் இந்திரா, 1975ல் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது மக்கள் அனுபவித்த நிகழ்வுகளை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பா.ஜ., - எம்.பி.,யும், பிரபல நடிகையுமான கங்கனா ரணாவத் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரே தயாரித்து, இயக்கியும் உள்ளார்.
இந்திராவின் அரசியல் நடவடிக்கைகள், எமர்ஜென்சி அமலான போது நடந்த நிகழ்வுகள், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அரங்கேறிய சம்பவங்கள் ஆகியவை எமர்ஜென்சி படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில், சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, இதை திரையிட தடை விதிக்கக் கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், இந்த படத்துக்கு எதிராக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் சீக்கியர் அமைப்பினர் சார்பில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்துாரைச் சேர்ந்த ஜபல்பூர் சீக்கியர்கள் சங்கத் மற்றும் ஸ்ரீ குரு சிங் சபா தாக்கல் செய்துள்ள மனுவில், எமர்ஜென்சி திரைப்படத்தில் சீக்கியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், அந்த படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ள கங்கனா மற்றும் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
'இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் கங்கனா ரணாவத், படத்தை இணைந்து தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசு, மத்திய பிரதேச அரசு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளிட்டோர், இந்த விவகாரத்தில் இன்றைக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, சீக்கிய சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கக் கோரி சென்சார் வாரியம் உத்தரவிட்டுள்ளதால், குறிப்பிட்ட தேதியில் எமர்ஜென்சி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.