ADDED : ஏப் 09, 2024 12:40 AM
லக்னோ,
'ஒரு திருமண நிகழ்ச்சியில், கன்யாதானம் என்பது அவசியமில்லை. அதே நேரத்தில், 'சப்தபடி' எனப்படும் ஏழு முறை அக்னியை வலம்வருவதே முக்கியம்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அசுதோஷ் யாதவ் என்பவருக்கு எதிராக, அவரது மாமனார் தரப்பினர் தொடர்ந்த கிரிமினல் வழக்கில், லக்னோ கூடுதல் மாவட்ட நீதிமன்றம், அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஹிந்து திருமண சட்டத்தின்படி திருமண நிகழ்ச்சியை உறுதி செய்வதற்கு, கன்யாதானம் எனப்படும் பெற்றோர் தன் மகளை திருமணம் செய்து வைக்கும் சடங்கு அவசியம் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை.
சப்தபடி எனப்படும், ஏழு முறை அக்னியை வலம் வருதே மிகவும் முக்கியம். சட்டத்தின்படி, கன்யாதானம் வழங்கப்பட்டதா என்பதற்கான சாட்சிகளை கோரத் தேவையில்லை.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

