கரடி சங்கண்ணாவுக்கு மேலிடம் மீது மீண்டும் அதிருப்தி
கரடி சங்கண்ணாவுக்கு மேலிடம் மீது மீண்டும் அதிருப்தி
ADDED : ஏப் 14, 2024 06:59 AM

கொப்பால்: பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணாவுக்கு, கட்சி மேலிடம் மீது மீண்டும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவரை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிநடக்கிறது.
கொப்பால் பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணா, 73. லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்த்தார். ஆனால் டாக்டர் பசவராஜ் கியாவடாருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிருப்தி அடைந்த கரடி சங்கண்ணா, காங்கிரசில் இணைய அக்கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
'மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து, உங்களுக்கு நல்ல செய்தி வரும்' என, கரடி சங்கண்ணாவிடம், விஜயேந்திரா கூறினார். இதனால் பசவராஜ் கியாவடாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
ஆனால் பிரசாரத்தின்போது, பசவராஜ் கியாவடார் ஆதரவாளர்கள், கரடி சங்கண்ணாவை அவமதித்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவிடம் இருந்தும், அவருக்கு நல்ல செய்தி வராததால், மேலிடம் மீது மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதையடுத்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். காங்கிரசில் இணையும்படி ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். ஆனாலும், 'சிறிது காலம் காத்திருந்து பார்க்கலாம்' என, கரடி சங்கண்ணா நினைத்துள்ளார்.
கொப்பால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகர ஹிட்னால் கூறுகையில், ''காங்கிரசுக்கு வரும்படி, கரடி சங்கண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது உண்மை தான். ஆனால் இதுவரை அவர், எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் வந்தால் எங்கள் கட்சிக்கு, அனுகூலமாக இருக்கும். அரசியல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் உரிமையை, கரடி சங்கண்ணாவிடம் விட்டுள்ளோம்,'' என்றார்.

