குமாரசாமியை கைது செய்வோம் கர்நாடக முதல்வர் மிரட்டல்
குமாரசாமியை கைது செய்வோம் கர்நாடக முதல்வர் மிரட்டல்
ADDED : ஆக 22, 2024 02:35 AM
பெங்களூரு,
''குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம்,'' என முதல்வர் சித்தராமையா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
'மூடா' முறைகேடு வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடந்த 17ம் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, கவர்னரிடம், மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு, கடிதம் வாயிலாக நேற்று முன்தினம் கோரிக்கை வைத்துள்ளது. இது, காங்., அரசின் பழிவாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொப்பாலில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:
குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம். தற்போதைக்கு கைது செய்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனாலும், அவர் இப்போதே பயந்து போயுள்ளார். தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி அளிப்பார் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக பெங்களூரில் குமாரசாமி கூறுகையில், ''என்னை கைது செய்ய ஒரு சித்தராமையா அல்ல, 100 சித்தராமையாக்கள் வர வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. கடந்த ஓராண்டு காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்று மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்றார்.
இது குறித்து சித்தராமையா கூறுகையில், ''குமாரசாமியை கைது செய்ய, 100 சித்தராமையா தேவையில்லை; ஒரே ஒரு ஏட்டு போதும்,'' என்றார்.