டில்லிக்கு இன்று கர்நாடக முதல்வர் திடீர் பயணம்!: அமைச்சரவை மாற்றி அமைப்பு?
டில்லிக்கு இன்று கர்நாடக முதல்வர் திடீர் பயணம்!: அமைச்சரவை மாற்றி அமைப்பு?
ADDED : ஜூலை 30, 2024 07:41 AM
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை மாற்றம், மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் இன்று காலை அவசரமாக டில்லி செல்கின்றனர்.
கர்நாடகாவில் 2023 மே மாதம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என, காங்., மேலிடம் வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல் வெளியானது.
அதன் பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியும், சித்தராமையாவின் மகனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும். அவ்வேளையில் மொத்த அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
14 மாதங்கள் நிறைவு
தற்போது ஆட்சி அமைந்து, 14 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. ஆனாலும், முதல்வர், துணை முதல்வர் இடையே அடிக்கடி மறைமுக கோஷ்டிப்பூசல் உருவாகி, அவர்கள் ஆதரவாளர்கள் மூலம் பகிரங்கமாக வெடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதற்கிடையில், சில அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு, பல தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவுக்கு, அமைச்சர்கள் செயல்படாமல் இருந்ததும் ஒரு காரணம் என்று கட்சி மேலிடம் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளது.
நாகேந்திரா ராஜினாமா
இதனால், திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு காங்., மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதையறிந்த அமைச்சர்கள், யாருடைய பதவி பறிக்கப்படுமோ என்று பேசி வருகின்றனர்.
மேலும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் சிக்கி, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மேலிடம் அழைப்பின் பேரில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் அவசரமாக டில்லி செல்கின்றனர்.
தலைவர் நியமனம்
அங்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி.,க்கள் சோனியா, ராகுல், தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் ஆகியோருடன் இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.
அப்போது அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்தும் அவர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு வேளை அனைவரும் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும், கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு புதியவரை நியமனம் குறித்தும் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.