கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானம்
கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானம்
ADDED : ஆக 23, 2024 05:05 AM

பெங்களூரு : 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, கர்நாடக அமைச்சரவை கூட்டத்திலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இதில், முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்கள் குறித்து, முதல்வரிடம் விளக்கம் கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், கவர்னர் அனுமதி அளித்தார்.
அதிகாரம் உள்ளது
இதை எதிர்த்து, முதல்வர் தாக்கல் செய்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், முதல்வர் பங்கேற்கவில்லை. முதல்வரின் உத்தரவின்படி, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்தது.
அதன்பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
ஏற்கனவே முதல்வருக்கு கவர்னர் அளித்த நோட்டீசை திரும்ப பெறும்படி, ஆக., 1ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியல் அமைப்பு சட்டம் 163வது பிரிவின் படி, கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.
இதன்படி, மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் சசிகலா ஜொல்லே, முருகேஷ் நிரானி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான முறைகேடு வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், விதான் சவுதாவில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
பறிப்பதற்கு சூழ்ச்சி
முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னரின் செயலை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், முதல்வருக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக மக்கள், 136 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற செய்து, காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால், பா.ஜ., - ம.ஜ.த., கட்சி தலைவர்கள், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் பதவியை பறிப்பதற்கு சூழ்ச்சி நடக்கிறது. இந்த மிரட்டலுக்கு பணிய மாட்டோம். ஜனநாயகத்தை காப்போம். இவ்வாறு அவர் கூறினார்.