தமிழகத்தில் போட்டியிடும் கர்நாடக 'மாஜி' அதிகாரிகள்
தமிழகத்தில் போட்டியிடும் கர்நாடக 'மாஜி' அதிகாரிகள்
ADDED : மார் 25, 2024 06:32 AM

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் இரண்டு முன்னாள் அதிகாரிகள், தமிழகத்தின் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் சிக்கமகளூரு எஸ்.பி., உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். மக்களுக்கு பிடித்தமான போலீஸ் அதிகாரியாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மக்கள் வருத்தமடைந்தனர்.
திறமையான, எந்த கரும்புள்ளியும் இல்லாமல் பணியாற்றிய அதிகாரியை, அரசு இழக்க கூடாது. பதவியில் தொடரும்படி அவர் மனதை மாற்ற வேண்டும் என, அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அரசும் முயற்சித்தது. ஆனால் அண்ணாமலை தன் முடிவில் உறுதியாக நின்றதால், அவரது ராஜினாமாவை அரசு ஏற்றது. அதன்பின் அரசியலுக்கு வந்து, பா.ஜ.,வில் இணைந்தார். தமிழக பா.ஜ., தலைவராக பணியாற்றுகிறார். லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவரை போன்றே, கர்நாடகாவின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக அரசியலுக்கு சென்றுள்ளார்.
இவர் திருச்சி பொறியியல் கல்லுாரியில் எலக்ட்ரானிக்சில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றவர். ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற இவர்.
கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பணியாற்றினார். கடந்த 2009 முதல் 2012 வரை, பல்லாரியில் உதவி கமிஷனராக இருந்தார். சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடாவில் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார்.
ஷிவமொகா மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாகவும் இருந்தார். சுரங்கம், நில ஆய்வியல் துறை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரும் சில ஆண்டுகளுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்று, காங்கிரசில் இணைந்து முழுநேர அரசியல்வாதி ஆனார்.
மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, சிவகுமார் தலைமையில் பாதயாத்திரை நடத்திய போது, காங்கிரசின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளியாக இருந்தார்.
தற்போது தமிழகத்தின், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.- நமது நிருபர் -

