'சயனைட்' மண்ணில் தங்கம் எடுக்க கர்நாடக அரசு அனுமதி
'சயனைட்' மண்ணில் தங்கம் எடுக்க கர்நாடக அரசு அனுமதி
ADDED : ஜூன் 21, 2024 05:45 AM
தங்கவயல்: தங்கவயலில், சயனைட் மண் கழிவில் உறங்கிக் கொண்டிருந்த தங்கம் உட்பட கனிமங்களை பிரித்தெடுக்க, மத்திய அரசுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தங்கவயல் தங்கச் சுரங்கத்தை, 1880ல் ஜான் டெய்லர் கம்பெனி ஆரம்பித்தது. தங்கச்சுரங்க தொழிலுக்கு மிக அவசியமாக இருந்தது மின் சக்தி. இதற்காகவே சிவசமுத்திராவில் 1902ல் நீர்மின் உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தினர்.
இதுவே, தெற்கு ஆசியாவில் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் ஆகும். இந்த மின் சக்தியை பயன்படுத்தி தான் பெங்களூரு, மைசூரு பெருநகரங்களில் மின்னொளி கிடைத்தது.
தேசிய மயம்
இந்தியா விடுதலைக்கு பின், தங்கச்சுரங்கம் 1956ல் தேசிய மயமாக்கப்பட்டு, மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 1962ல் அதனை, மத்திய அரசிடம், மாநில அரசு ஒப்படைத்தது. 1972ல் தங்கச் சுரங்கம், பொதுத் துறை நிறுவனமாக ஆக்கப்பட்டது.
அதுவரை கோலார் கோல்டுமைன் அண்டர் டேக்கிங் என்ற கே.ஜி.எம்.யு., என்ற பெயரில் தான் இயங்கி வந்தது. 1972ல் பி.ஜி.எம்.எல்., என்ற பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதன் குத்தகை காலம் 1980ல் முடிவடைந்தது. இது 2,000ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தங்கச்சுரங்கத்தில், உற்பத்தியை விட செலவு அதிகமானதால், 2001 மார்ச் 1ல் மூடப்பட்டது. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 23 ஆண்டுகளாக சுரங்கத்தில் நீர் நிரம்பி உள்ளது. யாரும் சுரங்கத்தில் இறங்கி பணியாற்ற முடியாது.
தொடர்ந்து, 129 ஆண்டுகளாக சுரங்கத்தில் உள்ள பாறைகளை பிளந்தெடுத்து, அதனை அரைத்து கூழாக்கி, தங்கத்தை பிரித்தெடுத்தனர்.
இதன்பின் கிடைத்த கழிவு மண், மலையாக கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. 13 இடங்களில் 5,11,23,615 டன் கழிவு மண் கொட்டி வைக்கப்பட்டது. இதை தான், 'சயனைட் மண்' என்று அழைக்கின்றனர். தொழில்நுட்பம் இல்லாததால், இதில் இருந்த தங்கத்தை துல்லியமாக பிரித்தெடுக்கவில்லை.
இந்த கழிவு மண்ணில், தங்கம் மட்டுமின்றி டங்ஸ்டன், ஷீலைட், கெலாடியம் போன்ற 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகங்கள் உள்ளன என, சுரங்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கச் சுரங்கத்தை நடத்த மத்திய அரசுக்கு மாநில அரசு கொடுத்திருந்த குத்தகை காலம் முடிந்து விட்டது. மீண்டும் தங்கச் சுரங்க தொழில் நடத்துவதாக இருந்தால், முறையாக மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், இதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.
அதே நேரம், சயனைட் மண்ணில் உள்ள தங்கம் உட்பட மற்ற கனிமங்களை எடுக்க மத்திய அரசு, மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
ஆலோசனை
இது தொடர்பாக, கர்நாடக அமைச்சரவை நேற்று கூடி ஆலோசித்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில், தங்கவயலுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
கோலார் மாவட்டத்தின் தங்கவயலில் உள்ள தங்கச்சுரங்கம் குத்தகை காலம் முடிவடைந்துள்ளது. தங்கம் எடுத்த பின் ஏற்பட்ட கழிவு மண், தங்கவயலில் 13 இடங்களில், மொத்தம் 1,003 ஏக்கரில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, சுரங்க நடவடிக்கைகளை தொடர, மத்திய அரசு கோரிய அனுமதிக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்கிறது.
தங்கச்சுரங்க தொழில் 12,881.85 ஏக்கரில் நடந்தது. 2022- - 23 வரை, மத்திய அரசு, மாநில அரசுக்கு 75.24 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இதை செலுத்த வேண்டும்.
தங்கவயலில் 2,330 ஏக்கரில், கர்நாடக அரசு தொழிற்சாலைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

