கர்நாடகாவில் ரூ.1 லட்சம் பெற போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு துவங்க குவியும் பெண்கள்
கர்நாடகாவில் ரூ.1 லட்சம் பெற போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு துவங்க குவியும் பெண்கள்
ADDED : மே 30, 2024 02:03 AM

பெங்களூரு, ;கர்நாடக முழுதும், தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்குவதில், சிறுபான்மை சமூக பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் குவியும் ஆயிரக்கணக்கான பெண்களால், தபால் அலுவலக ஊழியர்கள் திணறுகின்றனர். 'ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியே இதற்கு காரணம்.
லோக்சபா தேர்தல், இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. ஆட்சி பீடத்தில் அமர்வது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியா என்பது, ஜூன் 4ல் தெரியும்.
இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்றால், அது காங்கிரஸ் மட்டுமே. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை, பா.ஜ.,விடம் பறிகொடுத்தது.
எனவே, இம்முறை பிரதமர் மோடி அலையை மீறி, வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும் என்பது, காங்கிரசின் குறிக்கோள். இதற்காக, மக்களை ஈர்க்க கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல்
கடந்த 2023ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. இந்த வெற்றிக்கு காங்கிரஸ் அறிவித்த ஐந்து வாக்குறுதிகளே காரணமாக இருந்தன.
அதாவது, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க, 'சக்தி' திட்டம், வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும், 'கிரஹ ஜோதி', மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கும், 'அன்னபாக்யா', வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் வழங்கும், 'யுவநிதி', குடும்ப தலைவியருக்கு 2,000 ரூபாய் வழங்கும், 'கிரஹலட்சுமி' ஆகிய ஐந்து வாக்குறுதிகள், காங்கிரசுக்கு ஓட்டுகளை வாரி குவித்தன.
இதே உத்தியை லோக்சபா தேர்தலிலும், காங்கிரஸ் நாடு முழுதும் கையாண்டது. தேர்தல் அறிக்கையில், 25 முக்கிய திட்டங்களை அறிவித்தது.
இதில் பெண்களுக்கு மாதந்தோறும் 8,500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் ஒன்றாகும். இதே திட்டத்தை மையப்படுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை காங்., நிறைவேற்றியதால், லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வென்றால், மாதம் 8,500 ரூபாய் கிடைக்கும் என, கர்நாடக பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கர்நாடகாவில் உள்ள தபால் அலுவலகங்கள் முன்பாக, பெண்கள் அதிக எண்ணிக்கையில் குவிகின்றனர்.
அலைமோதும் கூட்டம்
இதில், சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த பெண்களே அதிகம் தென்படுகின்றனர். போஸ்ட் ஆபீசில் கணக்கு திறக்க போட்டி போடுகின்றனர். தினமும் அதிகாலை 4:00 மணிக்கே, தபால் அலுவலகம் முன்பாக வந்து காத்திருக்கின்றனர்.
பெங்களூரின் சிவாஜி நகர், வசந்த நகர் உட்பட பல்வேறு தபால் அலுவலகங்கள் முன்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல், அலுவலக ஊழியர்கள் திணறுகின்றனர்.
தலைமை போஸ்ட் மாஸ்டர் மஞ்சேஷ் கூறியதாவது:
கணக்கில் அரசு பணம் போடுவதாக வதந்தி பரவுவதால், கணக்கு துவக்க மக்கள் வருகின்றனர்.தபால் அலுவலக கணக்கில், பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்படுவதாக, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இது குறித்து, எடுத்துக் கூறினாலும் பொருட்படுத்துவதில்லை.
வெறும் 200 ரூபாய் மட்டுமே, டிபாசிட் பெற்று கணக்கு திறக்கிறோம். தினமும் 1,000 பேருக்கு கணக்கு துவங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.