உடல் உறுப்புகள் தானத்தில் 2வது இடம் பிடித்த கர்நாடகா
உடல் உறுப்புகள் தானத்தில் 2வது இடம் பிடித்த கர்நாடகா
ADDED : ஆக 01, 2024 11:16 PM
பெங்களூரு: உடல் உறுப்புகள் தானம் செய்வதில், நாட்டிலேயே கர்நாடகா இண்டாவது இடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தோரின் குடும்பத்தினரை கவுரவிக்க, கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
உடல் உறுப்புகள் தானம் செய்வதில், நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023ல், உடல் உறுப்புகள் தானம் செய்த நாட்டின் இரண்டாவது மாநிலம் என, கர்நாடகாவை மத்திய அரசு அறிவித்துள்ளது; விருதும் வழங்கியது. 2023ல் கர்நாடகாவில் 178 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும், பல்லாரி மாவட்டத்தில் மிக அதிகமானோர், உடல் உறுப்புகளை தானம் செய்த பெருமை பெற்றுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, உடல் உறுப்புகள் தானம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 'ஆயுஷ்மான் பவ' சுகாதார மேளாவில், உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து, உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
உடல் உறுப்புகள் தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாநில அரசு உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்க முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 14 வரை உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர், ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று கவுரவிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.