ADDED : ஜூன் 29, 2024 04:33 AM

பெங்களூரு:மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோரை முதல்வர் சித்தராமையா, டில்லியில் நேற்று சந்தித்து, கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, ஒப்புதல் வழங்கும்படி கோரினார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக, முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் டில்லி சென்றார். முதல் நாளில், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தி, விருந்து வைத்தார்.
இரண்டாவது நாளான நேற்று, தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, கர்நாடகாவில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி வழங்கி, பணிகளை விரைவுப்படுத்தும்படி கோரினார்.
குறிப்பாக, பெலகாவி - ஹுன்குந்த் - ராய்ச்சூர்; பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை; சூரத் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை; பெங்களூரு சேட்டிலைட் டவுன் வட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்கும்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ், பல்லாரி, உத்தர கன்னடாவில் ரிசர்வ் போலீஸ் படை அமைக்க ஒப்புதல் வழங்கும்படியும்;
நிர்பயா திட்டத்தின் கீழ், மைசூரு ஹுப்பள்ளி - தார்வாட், பெலகாவி, மங்களூரு, கலபுரகி நகரங்களில் தலா 200 கோடி ரூபாயில், மொத்தம் 1,000 கோடி ரூபாயில் பாதுகாப்பு நகர திட்டம் செயல்படுத்த ஒப்புதல் வழங்கும்படியும் கோரினார்.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று இரவு 8:00 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சந்திக்க உள்ளார். மோடி, மூன்றாவது முறை பிரதமர் ஆன பின், முதல்வர், முதல் முறையாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
கார்கேவுடன் சந்திப்பு
டில்லியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் சிவகுமார், நேற்று இரவு பெங்களூரு திரும்பினார். இதற்கிடையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, முதல்வர் சித்தராமையா, அவரது மகன் எதீந்திரா, தனித்தனியாக சந்தித்து பேசினர். இன்று பிரதமரை, முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், இன்று காலை துணை முதல்வர், மீண்டும் டில்லி செல்கிறார்.

