நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் 100 வீடு கட்டுகிறது கர்நாடகா
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் 100 வீடு கட்டுகிறது கர்நாடகா
ADDED : ஆக 03, 2024 11:04 PM
ஹாசன்: ''கர்நாடக அரசு சார்பில், வயநாட்டில் 100 வீடுகள் கட்டி தரப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
நமது அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில், நிலச்சரிவு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு நடந்த நாளே கர்நாடக அரசு சார்பில், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஹாசன் சக்லேஸ்பூர் ஷிராடி காட் மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து, கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன், தொலைபேசி வாயிலாக பேசி, தேவையான உதவி செய்யப்படும் என்று உறுதி அளித்தேன்.
மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே, இச்சம்பவத்தில், கன்னடர்கள் எத்தனை பேர் காணாமல் போயினர் என்ற தகவல் கிடைக்கும். கர்நாடகா அரசு சார்பில், வயநாட்டில் 100 வீடுகள் கட்டி தரப்படும்.
எந்த இடத்தில், எவ்வளவு தொகையில் கட்ட வேண்டும் என்பதை பின்னர் ஆலோசனை தீர்மானிக்கப்படும்.
மைசூரு மாவட்டம் நிர்வாகம் சார்பில், ஏராளமான பொருட்கள் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் சார்பில், 1,008 குடிநீர் பாட்டில்கள், 100 மழை கோட்கள், 500 பாட்டில் கிருமி நாசினி, 1,000 முழு கவச உடைகள், 5,000 கையுறைகள், 11,000 முககவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தவிர, வால்வோ, பயோகான், ஆஷயா அறக்கட்டளை, எல்க்ட்ரானிக் சிட்டி தொழில் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.
மனிதாபிமான முறையில் உதவிய அனைவருக்கும் கர்நாடக அரசு சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.