கர்நாடக மேலவை ஆசிரியர், பட்டதாரி தேர்தல் காங்கிரஸ் - 3, பா.ஜ., - 2, ம.ஜ.த., - 1ல் வெற்றி
கர்நாடக மேலவை ஆசிரியர், பட்டதாரி தேர்தல் காங்கிரஸ் - 3, பா.ஜ., - 2, ம.ஜ.த., - 1ல் வெற்றி
ADDED : ஜூன் 08, 2024 04:49 AM

பெங்களூரு : கர்நாடக மேலவையின் பட்டதாரி, ஆசிரியர் ஆறு தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும், பா.ஜ., இரண்டு தொகுதிகளிலும், ம.ஜ.த., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடக சட்ட மேலவையின் வட கிழக்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக தென் மேற்கு பட்டதாரி தொகுதி, பெங்களூரு பட்டதாரி தொகுதி, கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி, கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி ஆகிய ஆறு தொகுதிகளுக்கு, இம்மாதம் 3ம் தேதி, 631 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடந்தது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து ஆறு தொகுதியிலும், காங்கிரஸ் தனித்து ஆறு தொகுதியிலும் போட்டியிட்டனர். சுயேச்சைகள் உட்பட 78 வேட்பாளர்கள் இறுதி களத்தில் இருந்தனர். ஆசிரியர், பட்டதாரி என மொத்தம், 4.33 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றிருந்தனர்.
25 ஓட்டு சீட்டுகள்
நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது. ஓட்டு சீட்டு முறையில், ஓட்டுப்பதிவு நடந்ததால், அதை 25 சீட்டுகளாக கட்டி எண்ணுவதற்கு மிகவும் தாமதம் ஏற்பட்டது.
தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் ம.ஜ.த.,வின் போஜேகவுடா; தெற்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜ., சின்னத்தில் களமிறங்கிய ம.ஜ.த.,வின் விவேகானந்தா ஆகியோர் வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
மற்ற நான்கு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, நள்ளிரவு வரை நடந்தது.
தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில், முதல் விருப்ப ஓட்டுகளின் அடிப்படையில், காங்கிரசின் சீனிவாஸ் 8,909 ஓட்டுகளும்; பா.ஜ.,வின் ஒய்.ஏ.நாராயணசாமி, 7,142 ஓட்டுகள் பெற்றனர். 704 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன.
ஏழு சுற்று ஓட்டு எண்ணிக்கையிலும், காங்கிரஸ் வேட்பாளரே முன்னிலை வகித்தார். இதனால், அவர், 1,767 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பெங்களூரு தெற்கு பட்டதாரி தொகுதியில், காங்கிரசின் ராமோஜிகவுடா, 36,729 ஓட்டுகளும், பா.ஜ.,வின் அ.தேவகவுடா, 24,888 ஓட்டுகளும் பெற்றனர்.
ஆறு சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளரே முன்னிலை வகித்து, 11,841 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பொதுவாக பட்டதாரி தேர்தலில் இவ்வளவு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெறுவது மிகவும் அரிது.
36 ஆண்டுகள்
ஆறு மாதங்களுக்கு முன்பே வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டியதே பெரிய வெற்றிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த தொகுதியில், 36 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென் மேற்கு பட்டதாரி தொகுதியில், பா.ஜ.,வின் தனஞ்செயா சர்ஜி, 37,627 ஓட்டுகளும், காங்கிரசின் ஆயனுார் மஞ்சுநாத், 13,516 ஓட்டுகளும் பெற்றனர். 5,115 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை நடந்த 14 சுற்றுகளிலுமே பா.ஜ., வேட்பாளர் முன்னிலை வகித்து, 24,111 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வட கிழக்கு பட்டதாரி தொகுதியில், பா.ஜ.,வின் அமர்நாத் பாட்டீல், காங்கிரசின் சந்திரசேகர் பாட்டீல் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், அதிக ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில், பா.ஜ., மூன்றில் இருந்து, இரண்டாகவும்; ம.ஜ.த., இரண்டில் இருந்து, ஒன்றாகவும் குறைந்துள்ளது.
காங்கிரஸ் ஒன்றில் இருந்து, மூன்றாக தன் பலத்தை உயர்த்திக் கொண்டுள்ளது.
சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 11 எம்.எல்.சி.,க்களில் காங்கிரஸ் 7, பா.ஜ., 3, ம.ஜ.த., 1 பதவியை பெற்றனர். இத்துடன், மேலவையில் காங்கிரஸ் பலம் 34ஆக உயர்ந்துள்ளது.
பா.ஜ., 31, ம.ஜ.த., 8 என இந்த கூட்டணியின் பலம் 39 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 38 எம்.எல்.சி.,க்களின் ஆதரவு தேவை.
எனவே இம்முறை ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.