தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு!: ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா முடிவு
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு!: ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா முடிவு
ADDED : ஜூலை 13, 2024 01:33 AM

பெங்களூரு: தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி., தண்ணீர் திறக்கும்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவை ஏற்க, கர்நாடக அரசு மறுத்துவிட்டது. உத்தரவை எதிர்த்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., நீரை, கர்நாடக அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., நீரில், 2.25 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தது. இம்மாதம் 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டிய நிலையில், 9ம் தேதி வரை 1.39 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது.
கோரிக்கை
இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது தமிழகம் சார்பில், நிலுவையில் உள்ள பாக்கி நீரை வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, இம்மாதம் இறுதி வரை தினமும் 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி, குழு தலைவர் வினித் குப்தா, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார், மூத்த அமைச்சர்கள் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடந்தது.
பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் இம்முறை வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இதுவரை 28 சதவீதம் மட்டுமே பருவமழை பெய்துள்ளது.
எனவே, தமிழகத்துக்கு நீர் திறப்பது குறித்து, ஜூலை இறுதி வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், ஜூலை 12ம் தேதி முதல், இம்மாதம் இறுதிவரை தினமும் 1 டி.எம்.சி., நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடகா தரப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, கபினி அணையில் திறக்கப்படும் நீர் தமிழகத்துக்கு செல்கிறது. பிலிகுண்டுலுவில் அளவு எடுத்தால், எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பது தெரியும்.
சாலை மறியல்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு அணைகளில், தற்போதைக்கு 40 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டி உள்ளது. மழை பெய்வதை கருத்தில் கொண்டு, ஜூலை இறுதிவரை காத்திருக்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்து, மாண்டியாவில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக, கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

