செப்., 18ல் காஷ்மீர் தேர்தல்: அக்டோபர் 1 வரை 3 கட்டமாக நடத்த ஏற்பாடு
செப்., 18ல் காஷ்மீர் தேர்தல்: அக்டோபர் 1 வரை 3 கட்டமாக நடத்த ஏற்பாடு
ADDED : ஆக 17, 2024 12:27 AM

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல்கள் நடத்தப்பட்டு, வரும் அக்., 4ல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த 2019 ஆகஸ்ட் 5ல் மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
கோரிக்கைகள்
ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ், கவர்னர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது.
இதையடுத்து, 'ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கைகள் எழுந்தன. இங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக நடவடிக்கைகள் துவங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.
பிரதமர் மோடி கடந்த மாதம் ஸ்ரீநகர் சென்றிருந்தபோது, 'விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்' என தெரிவித்துஇருந்தார்.
இதையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்கள் சந்திப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீருக்கு நாங்கள் நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தோம். அப்போது மிகப்பெரிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் மக்களிடம் பார்த்தோம். தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு முழு அளவில் நம்பிக்கையும், ஆர்வமும் இருப்பது உறுதியாக தெரிந்தது.
87 லட்சம் வாக்காளர்கள்
அவர்களது எதிர்காலத்தை, அவர்களே அமைப்பதற்கு விரும்புகின்றனர். துப்பாக்கி குண்டுகளுக்கு பதிலாக ஓட்டுப்பெட்டிகளை தான் அவர்கள் விரும்புகின்றனர். மக்களின் விருப்பத்தை ஏற்று, 90 தொகுதிகள் உள்ள ஜம்மு - காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்கு செப்., 18ம் தேதியும்; இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு செப்., 25ம் தேதியும் தேர்தல்கள் நடக்கவுள்ளன. மூன்றாம் கட்டமாக, 40 தொகுதிகளுக்கு அக்., 1ல் தேர்தல் நடத்தப்படும்.
ஓட்டு எண்ணிக்கை அக்., 4ல் நடக்கும். அமர்நாத் புனித பயணம் முடிந்த அடுத்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மொத்தம், 87 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.
17 தனி தொகுதிகள்
ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்., 1ல் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்; 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், 73 பொதுத் தொகுதிகளும், 17 தனித் தொகுதிகளும் உள்ளன.
வழக்கமாக ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது ஜம்மு - காஷ்மீருக்கு
தொடர்ச்சி 20ம் பக்கம்
அதிக அளவில் பாதுகாப்பு தேவைப்படுவதால், மஹாராஷ்டிராவுக்கான தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க முடியவில்லை.
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிந்ததும், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்வர் குமார், சுக்பீர்சிங் சந்து ஆகியோர் உடனிருந்தனர்.
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த சட்டசபையின் பதவிக்காலம், வரும் நவ., 3ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, பா.ஜ., தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் நவ., 26ல் முடிவடைகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜன., 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த மாநிலத்துக்கான தேர்தல் தேதியும் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
- -நமது டில்லி நிருபர் -