திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்
திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்
ADDED : ஏப் 22, 2024 11:50 PM
புதுடில்லி: 'தினமும் இன்சுலின் கேட்டு வருகிறேன். என் நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் டாக்டர்கள் கூறவே இல்லை' என, திஹார் சிறை நிர்வாகத்துக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
டில்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளியான இவர், சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும், இன்சுலின் தேவைப்படுவதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இதையடுத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஏற்பாட்டை, திஹார் சிறை நிர்வாகம் செய்தது.
இந்த ஆலோசனையின் போது, நீரிழிவு பிரச்னையை அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பவில்லை என்றும், அவரது நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவித்ததாகவும் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதை திட்டவட்டமாக மறுத்து, திஹார் சிறை நிர்வாகத்துக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். இக்கடிதத்தை, டில்லி அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்டார்.
அதன் விபரம்:
எய்ம்ஸ் டாக்டர்களுடனான ஆலோசனையின் போது, இன்சுலின் விவகாரத்தை நான் எழுப்பவில்லை என, திஹார் சிறை நிர்வாகம் கூறியது, அபத்தமானது. இந்த விவகாரத்தை நான் தினமும் எழுப்பி வருகிறேன்.
என்னை சந்திக்க வரும் டாக்டர்களிடம் என் சர்க்கரை அளவு குறித்து தெரியப்படுத்தி வருகிறேன். என் நீரிழிவு நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என, எய்ம்ஸ் டாக்டர்கள் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.
அப்படியிருக்கையில், அவர்கள் தெரிவிக்காத கருத்தை திஹார் சிறை நிர்வாகம் கூறியது ஏன்? அரசியல் அழுத்தத்தின் கீழ், திஹார் சிறை நிர்வாகம் தவறான அறிக்கையை வெளியிட்டது வேதனைக்குரியது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

