வழக்கறிஞர் சிங்வியுடன் கெஜ்ரிவால் தம்பதி சந்திப்பு
வழக்கறிஞர் சிங்வியுடன் கெஜ்ரிவால் தம்பதி சந்திப்பு
ADDED : செப் 14, 2024 08:48 PM
புதுடில்லி:திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
கெஜ்ரிவாலுடன் அவரது மனைவி சுனிதா, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் சென்றனர்.
இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: சர்வாதிகாரியின் சதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சட்ட உதவிகளைச் செய்துவரும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகள் தொடுத்துள்ள வழக்குகளில் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடுகிறார்.