பா.ஜ., - ஆம் ஆத்மி போட்டி போராட்டம் காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் மீண்டும் உத்தரவு
பா.ஜ., - ஆம் ஆத்மி போட்டி போராட்டம் காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் மீண்டும் உத்தரவு
ADDED : மார் 27, 2024 12:39 AM

புதுடில்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சியினரும், அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி பா.ஜ.,வினரும் நேற்று நடத்திய போட்டி போராட்டத்தில் நேற்று டில்லி கிடுகிடுத்தது.
''அமலாக்கத் துறையின் விசாரணை காவலில் உள்ள கெஜ்ரிவால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில், பொது மக்களுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்,'' என, சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
கைது
டில்லியில், மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், சமீபத்தில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை கைது செய்தது.
இவரை, 28ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், முதல்வராக, அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என, ஆம் ஆத்மி அறிவித்தது.
கடந்த வாரம், சிறையில் இருந்தபடி, குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக, நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று, ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில், பொது மக்களுக்கு மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமலாக்கத் துறையின் காவலில் இருந்தாலும், டில்லி மக்களின் நலன் குறித்தே அவர் எப்போதும் சிந்தித்து வருகிறார். அவரது உத்தரவுப்படி, நாங்கள் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடியடி
இதற்கிடையே நேற்று, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக, ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இதையொட்டி, பிரதமர் மோடி வீடு அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் ஸ்டேஷனும் மூடப்பட்டது.
படேல் சவுக் மெட்ரோ ஸ்டேஷன் முன் திரண்ட நுாற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து, அவர்களை போலீசார் கலைத்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி பா.ஜ.,வினரும் போராட்டம் நடத்தினர்.
டில்லி தலைமைச் செயலகம் முன் திரண்ட பா.ஜ.,வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும், அவர்களை போலீசார் கலைத்தனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து வரும், 31ல் டில்லியில் இண்டியா கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டத்தில், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் பங்கேற்க போவதாக, ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

