ADDED : மே 11, 2024 01:00 AM

- நமது சிறப்பு நிருபர் - தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது; ஜூன் 2ல் சிறைக்கு திரும்புமாறு நிபந்தனை விதித்தது.
டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தவறான முன்மாதிரி
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கைதாகி, 50 நாட்களாக சிறையில் இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரம் டல்லடிக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக அவருக்கு இடைக்கால ஜாமினாவது வழங்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு போடப்பட்டது.
ஜாமின் வழங்குவதை மத்திய அரசின் அமலாக்கத் துறை ஆட்சேபித்தது. 'தேர்தல் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமை கிடையாது. அரசியல்வாதி என்பதால் சலுகை காட்ட சட்டத்தில் இடம் கிடையாது. ஜாமின் கொடுத்தால் அது தவறான முன்மாதிரி ஆகிவிடும்' என்று கடுமையாக எதிர்த்தது.
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா நேற்று வழங்கிய தீர்ப்பு:
கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. அவருக்கு குற்ற பின்னணி கிடையாது. அவரால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இல்லை.
தவிர, அவரை கைது செய்தது செல்லாது என இதே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்காக அவர் கேட்கும் இடைக்கால ஜாமினை அப்படியே நிராகரிக்க முடியாது.
தேர்தலை காரணம் காட்டி அரசியல்வாதி ஜாமின் கேட்பதை அனுமதித்தால், அறுவடையை காரணம் காட்டி விவசாயி கேட்கலாம். தொழில் நஷ்டத்தை காரணம் காட்டி பிசினஸ்மேன் கேட்கலாம் என்று அமலாக்கத் துறை வாதிட்டதை ஏற்க முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலை அறுவடை, வணிகத்துடன் ஒப்பிட முடியாது.
ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மைகளை பரிசீலித்து இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், கெஜ்ரிவால் வாதங்கள் ஏற்புடையதாக உள்ளன.
முதல்வர் பணி கூடாது
அதன் அடிப்படையில் அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்குகிறோம். ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைந்து சிறைக்கு திரும்ப வேண்டும்.
ஜாமினில் வெளியே இருக்கும்போது கெஜ்ரிவால் முதல்வராக பணி செய்யக்கூடாது; கோப்பு களில் கையெழுத்திடக் கூடாது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. சாட்சிகளை சந்திக்கக்கூடாது.
லோக்சபா தேர்தலின் முக்கியத்துவத்தை கருதியே ஜாமின் வழங்கப்படுகிறது. இது, அவர் அரசியல்வாதி என்பதற்காக வழங்கும் சலுகை அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதையடுத்து, திஹார் சிறையில் இருந்து மாலையில் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். வெளியே திரண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அவரை வரவேற்றனர்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஜாமின் கிடைத்து விட்டதால் கெஜ்ரிவால் நிரபராதி ஆகிவிடவில்லை என பா.ஜ., கூறியுள்ளது. இன்று முதல் டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் ஜாமினில் வெளியே வர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. உங்களால் இன்னும் வலிமை அடைகிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக இன்னும் உறுதியாக போராடுவேன். 140 கோடி மக்களும் என்னுடன் போராட வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர்