டில்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி: கெஜ்ரிவால்
டில்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி: கெஜ்ரிவால்
ADDED : மே 12, 2024 01:52 PM

புதுடில்லி: டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பா.ஜ., சதி திட்டம் தீட்டியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
திஹார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிய வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கெஜ்ரிவால் கூறியதாவது: நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் சிறையில் இருக்கும் போது டில்லி மக்களுக்கு மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் ஏதேனும் பிரச்னைகள் வந்து விடுமோ என்று நான் கவலைப்பட்டேன்.
பா.ஜ., சதி திட்டம்
மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் அதை பா.ஜ.,வினர் அரசியல் ஆக்குவார்கள். தேர்தலுக்கு இடையில், என்னை கைது செய்தனர். ஆனாலும் ஆம்ஆத்மி கட்சி மேலும் வலுப்பெற்றுள்ளது. டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பா.ஜ., சதி திட்டம் தீட்டியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
10 உத்தரவாதங்கள் என்னென்ன?
பின்னர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது: எனது கைது காரணமாக உத்தரவாதங்கள் அளிக்க தாமதமானது.
* நாட்டில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவோம். நாட்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால் 2 லட்சம் மெகாவாட் மட்டுமே தேவைப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* நமது அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி கிடைக்கவில்லை. அனைவருக்கும் நல்ல சிறந்த இலவசக் கல்வியை ஏற்பாடு செய்வோம். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வியை வழங்கும்.
நல்ல சிகிச்சை
* அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிளினிக்குகள் திறக்கப்படும்.
* சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய நிலங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்.
* அனைத்து ராணுவ வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு பழைய நடைமுறைப்படியே செய்யப்படும். அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்பட்டு, இதுவரை பணியமர்த்தப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்களாக்குவோம்.
மாநில அந்தஸ்து
* வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்படும்.
* டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம்.
* ஓராண்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* நேர்மையானவர்களை சிறைக்கு அனுப்பும் முறையும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் முறையும் ஒழிக்கப்படும்.
ஜி.எஸ்.டி., வரி
* வர்த்தகம் மற்றும் தொழில்துறையை பெரிய அளவில் ஊக்குவிக்க அனைத்து சட்டங்களும் நிர்வாக அமைப்புகளும் எளிமைப்படுத்தப்படும். ஜி.எஸ்.டி., வரி அகற்றப்படும்.
இந்த 10 உத்தரவாதங்கள் அனைத்தும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் என நான் உறுதிசெய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.