ஜூன் 2ல் மீண்டும் சிறை செல்கிறார் கெஜ்ரிவால்? ஜாமின் நீட்டிப்பு மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
ஜூன் 2ல் மீண்டும் சிறை செல்கிறார் கெஜ்ரிவால்? ஜாமின் நீட்டிப்பு மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
ADDED : மே 29, 2024 12:43 AM
புதுடில்லி, 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை அவரச வழக்காக விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தல் முடியும் தினமான ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் அளித்து உச்ச நீதிமன்றம் மே 10ல் உத்தரவிட்டது. ஜூன் 2ல் அவர் சரணடைய வேண்டும் என்றும், அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
மேலும், கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்த பிரதான மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி கெஜ்ரிவால் தரப்பு கடந்த 26ல் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவால், 7 கிலோ வரை எடை குறைந்துள்ளதாகவும், அவர் வெளியே வந்த பின்னும் எடை கூடவில்லை என்பதால், அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது ரத்த சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரில் கீட்டோன் அளவு அபாயகரமாக உயர்ந்துள்ளதால், அவரது சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பதற்கும், புற்றுநோய் பாதிப்புக்கும் சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு சில அவசர மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால், இடைக்கால ஜாமினை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை வைத்தார்.
இதை கேட்ட நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய விடுமுறை கால அமர்வு, 'இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான தீபங்கர் தத்தா, விடுமுறைக் கால அமர்வில் கடந்த வாரம் இருந்தபோது இந்த கோரிக்கையை ஏன் வைக்கவில்லை' என, கேள்வி எழுப்பினர். இரு தினங்களுக்கு முன் தான் மருத்துவ பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக சிங்வி தெரிவித்தார்.
இதையடுத்து, 'கெஜ்ரிவாலின் பிரதான மனு மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரும் மனு, உரிமை பிரச்னையை எழுப்புவதால், இதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார்' என, அமர்வு உத்தரவிட்டது.
இதனால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 2ல், கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு திரும்புவார் என தெரிகிறது.