சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு
சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 20, 2024 08:59 PM
புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டு மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகியவை வழக்குப் பதிவு செய்து கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது.
இதில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சி.பி.ஐ., வழக்கில் நீதிமன்றக் காவல் முடிவடைந்தை அடுத்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன், கெஜ்ரிவால் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையை வரும் 27ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிகிறது.

