வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு
வக்கீலை சந்திக்க கூடுதல் நேரம் கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு
ADDED : ஏப் 10, 2024 09:29 PM

புதுடில்லி:வழக்கறிஞர்களைச் சந்திக்க கூடுதல் நேரம் அளிக்கக் கோரிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுவை டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், சிறையில் தன் வழக்கறிஞர்களைச் சந்திக்க கூடுதல் நேரம் அளிக்க உத்தரவிடக் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிறைக்குள் இருந்து அரசை நடத்த வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது. இது சிறை விதிமுறைகளுக்கு எதிரானது. சட்டப்பூர்வ சந்திப்புகளை கெஜ்ரிவால் தவறாக பயன்படுத்துகிறார்' என வாதிட்டார்.
கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு நபர் புரிந்து கொள்ளவும், அறிவுரைகளை வழங்கவும் வாரத்துக்கு ஒரு மணி நேரம் போதாது.
'வழக்கறிஞரை சந்திக்க நேரம் கேட்பது மிக அடிப்படையான சட்ட உரிமை. ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் மீது எட்டு வழக்குகள் இருந்தபோதும் அவருக்கு வாரத்துக்கு மூன்று முறை தலா ஒரு மணி நேரம் வழக்கறிஞரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகளை எதிர்கொள்வதால், கெஜ்ரிவால் தன் வழக்கறிஞர்களுடன் வாரத்துக்கு ஐந்து முறை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்' என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

