கென்யா விமான சேவைகள் 'அதானி' ஒப்பந்தத்தால் முடக்கம்
கென்யா விமான சேவைகள் 'அதானி' ஒப்பந்தத்தால் முடக்கம்
ADDED : செப் 12, 2024 01:12 AM
புதுடில்லி:ஆப்ரிக்க நாடான கென்யா, விமான நிலையம் தொடர்பாக 'அதானி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு விமான சேவைகள் முடங்கின.
கென்ய அரசு, அந்நாட்டின் முக்கிய விமான நிலையமான 'ஜோமோ கென்யட்டா'வை மறுசீரமைத்து, கூடுதல் ஓடுதளம் மற்றும் முனையம் அமைக்க, அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி இந்த விமான நிலையத்தின் கட்டுமானம், இயக்கம் மற்றும் மேற்பார்வைப் பணிகள், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் காரணமாக வேலை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், பணியாளர்களுக்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் மிகவும் கடுமையானதாக மாறக்கூடும் என்றும், கென்யா விமான பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தை கைவிடக்கோரி வேலை நிறுத்தமும் அறிவித்தது.
இதுதொடர்பாக 'கென்யா ஏர்வேஸ்' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலை நிறுத்தம் நடைபெறுவதால், விமான சேவைகள் தாமதமாகலாம் என்றும், ரத்து செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கென்யாவின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் தாக்கல் செய்துள்ள மனு விசாரிக்கப்படும் வரை, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.