ADDED : ஜூலை 11, 2024 04:40 AM

குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 37 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது 'கப்பே சிகரம்' மலை. கடல் மட்டத்தில் இருந்து 1,420 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை, தடியன்டமால் சிகரத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
செலவாரா கிராமம் அருகில் உள்ள மலையில் இருந்து தான் 'செலவாரா' ஆறு உற்பத்தியாகிறது. சாகச பிரியர்கள், மலையேற்றம் செல்வோருக்கு உகந்த இடம். மழைக்காலத்தில் இம்மலைக்குச் செல்லும்போது, வழிநெடுகிலும் சிறிய நீரோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள், பசுமையை பார்த்து ரசித்தபடி செல்லலாம்.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து அரைமணி நேரத்தில், மலை சிகரத்தை அடைந்துவிடலாம்.
மலையேற்றத்தின் முதல் மூன்றில் ஒரு பங்கு, கரடுமுரடான கல் பாதையாக இருக்கும். எனவே, நிதானமாக ஏற வேண்டும். அடுத்த ஒரு பங்கு, செங்குத்தாக இருக்கும்; ஆனால், சமாளித்துச் செல்லலாம். அதன் பின், பாதைகள் சீராக அமைந்திருக்கும்; சுபலமாக ஏறிச் செல்லலாம்.
சிகரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும்போது, அப்பகுதி உங்களை மனதை கவரும். முடிவற்ற பசுமையான காடுகளையும், மூடுபனி, மேகங்கள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய பள்ளத்தாக்குகளையும் காணலாம்.
இதன் ஒருபுறம் கேரள எல்லையையும், மறுபுறம் குடகையும் பார்க்கலாம்.
மலையேற்றம் செய்ய நினைப்போர், முறைப்படி வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே, அனுமதிக்கப்படுவர். காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை இங்கு செல்லலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மைசூரு விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மைசூரு பஸ் நிலையம் சென்று, குடகு மாவட்டம், மடிகேரிக்கு செல்லலாம். இதன் பின், டாக்சி மூலம் செலவாரா கிராமத்துக்கு செல்லலாம்.
ரயிலில் செல்வோர், மடிகேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி அல்லது கேப் மூலம் செல்லலாம்.

