என்னை இருட்டில் வைத்திருக்கிறார்; கேரள முதல்வர் மீது கவர்னர் மீண்டும் புகார்
என்னை இருட்டில் வைத்திருக்கிறார்; கேரள முதல்வர் மீது கவர்னர் மீண்டும் புகார்
ADDED : அக் 12, 2024 07:28 AM

திருவனந்தபுரம்: 'மாநிலத்தில் நடைபெறும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்த தகவலும் தராமல், என்னை முதல்வர் பினராயி விஜயன் இருட்டில் வைத்திருக்கிறார்' என கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
தேச விரோத செயல்கள் நடப்பது குறித்து என்னிடம் தகவல் தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார். இதையடுத்து, முதல்வருக்கு எதிரான கருத்துகளை ஆரிப் முகமது கான் அள்ளி வீசி வருகிறார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் குறித்து, கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது: மாநிலத்தில் நடைபெறும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்த தகவலும் தராமல், என்னை முதல்வர் பினராயி விஜயன் இருட்டில் வைத்திருக்கிறார். அவரை நான் நம்பமாட்டேன். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான சில செயல்கள் நடப்பது தெரியவந்தால், ஜனாதிபதியிடம் புகார் அளிப்பது எனது கடமையா இல்லையா? தேசத்திற்கு எதிரான குற்றம் என்ன?
தேச விரோத செயல்கள்
நீங்கள் (முதல்வர்) எனக்கு விளக்கியிருக்க வேண்டாமா? அது உங்கள் கடமையல்லவா? உங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டீர்கள். தகவல் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியும், அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை.தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்பிய பின்னரே அவர் எனது கடிதத்தை ஒப்புக்கொண்டு 27 நாட்களுக்குப் பிறகு பதிலளித்தார்.
ஆனால், அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தேச விரோத செயல்கள் நடக்கவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் (முதல்வர்) ராஜ் பவனுக்கு வருவதில்லை. அவர் அவர்களை (தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி) வர அனுமதிக்கவில்லை. இனி அவர்கள் வரத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.