ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபம்
ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபம்
ADDED : ஏப் 02, 2024 11:42 PM
திருவனந்தபுரம்:''காங்., எம்.பி., ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது,'' என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபமாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்., போட்டியிடுகிறது. இவர்களுக்கு எதிராக முக்கியமாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதி காங்., வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டு நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூ., சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இது இண்டியா கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
பா.ஜ.,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனிராஜாவுக்கும் எதிராக ராகுல் போட்டியிடுவது என்ன நியாயம்.
அவர் வயநாட்டில் பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடவில்லை. எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார். காங்.,தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டில்லி அரசுக்கு எதிராக காங்., புகார் அளித்தது. இந்த நடவடிக்கையின் இறுதியில் தான் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்த சட்டம் கொள்கைகளால் இந்தியாவின் மதசார்பின்மையை மத்திய பா.ஜ., அரசு அழித்து வருகிறது. ராகுல் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

