அரசியல் சாசன அமர்வை அமைக்க கோர்ட்டுக்கு கேரள அரசு கோரிக்கை
அரசியல் சாசன அமர்வை அமைக்க கோர்ட்டுக்கு கேரள அரசு கோரிக்கை
UPDATED : ஆக 31, 2024 12:19 AM
ADDED : ஆக 30, 2024 11:16 PM

புதுடில்லி: மாநிலத்தின் செலவுகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு மற்றும் பொது சந்தையில் இருந்து திரட்ட கேரள அரசுக்கு வரம்பு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தரப்பு மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இந்த மனுவை விசாரித்தனர்.
அப்போது, 'நிகர கடன் திரட்ட கேரள அரசுக்கு விதிக்கப்பட்ட வரம்பை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது' என, தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை அரசியல்சாசன அமர்வு நியமிக்கப்படாததால், கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில், நேற்று முறையிடப்பட்டது.
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''கேரள அரசின் மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி, ஏப்., 1ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அமர்வு அமைப்பது குறித்து நீதிமன்ற அதிகாரிகள் இ - மெயில் அனுப்பாமல் காலம் தாழ்த்துகின்றனர்,'' என்றார்.
இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்துள்ளார்.

