ADDED : பிப் 28, 2025 01:58 AM
கொச்சி'பொது இடங்களில் முறையான அனுமதியின்றி, புதிதாக கொடிக்கம்பங்களை வைக்க மாநில அரசு அனுமதிக்கக் கூடாது' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் என்ற இடத்தில் உள்ள, மன்னம் சுகர் மில் என்ற தனியார் நிறுவனம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சட்ட விரோதமாக வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக, கொள்கை வகுக்க, மாநில அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது.
'அத்தகைய கொடிக்கம்பங்களை இனிமேல் அனுமதிக்க மாட்டோம்' என இதற்கு முன் பலமுறை, மாநில அரசு தெரிவித்துள்ளது. எனினும், அதை செயல்படுத்தவில்லை.
இனிமேல் எந்தவித புதிய, நிரந்தர அல்லது தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க, தனியார், தொழிற்சங்கங்கள் அல்லது கட்சியினருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. பொது இடங்களில் முறையான அனுமதியின்றி எவ்வித கொடிக்கம்பங்களையும் யாரும் வைக்கக் கூடாது.
சட்டப்படி அனுமதி அளிக்கக்கூடிய அமைப்பிடம் இருந்து முறையான அனுமதியின்றி சாலையோரங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற இடங்களில் கட்சி அல்லது அமைப்புகளின் சார்பில், புதிதாக கொடிக்கம்பங்களை அமைப்பதை அரசு அனுமதிக்கக் கூடாது.
இந்த உத்தரவை, இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். அதற்கான உத்தரவை, உள்ளாட்சி நிர்வாகங்கள், அறிக்கை வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
இந்த உத்தரவின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, ஒரு மாதத்திற்குள், மாநில அரசின் உள்ளாட்சி நிர்வாகத் துறையின் செயலர், இந்த நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.